சிங்கப்பூரில் 1875ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கை வர்த்தமானி என்ற பத்திரிகை தென்கிழக்காசியாவில் வெளிவந்த முதல் தமிழ் இதழ். ஆசிரியரான மகுதூம் சாயுபு இது தவிர தங்கை நேசன், ஞானசூரியன், சிங்கை நேசன் போன்ற பத்திரிகைகளையும் வெளியிட்டுள்ளார். அதற்கு முன், 1872ல் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவர் எழுதிய முனாஜாத்துத் திரட்டு என்ற கவிதை நூல் சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல். அந்நூல் தேசிய நூலக வாரியத்திடம் உள்ளது.
இப்படி, சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம்கள் இலக்கியத்திற்கு 19ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை ஆற்றிவரும் பங்களிப்பை, என்றும் அனைத்துலக மெய்நிகர் கருத்தரங்கில் தமிழவேள் நற்பணி மன்ற செயலாளரும் செம்மொழி இதழின் ஆசிரியருமான திரு எம்.இலியாஸ் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திவரும் கருத்தரங்கத் தொடரில் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு தமிழ் முஸ்லிம்களின் பங்கு குறித்த அங்கம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி 'ஸூம்' மெய்நிகர் தளம் மூலம் நடந்தது.
அதில் படைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையை விரிவாக்கம் செய்து நூலாக வெளியிட திட்டம் உள்ளதாகக் கூறினார் திரு இலியாஸ்.
"இந்த ஆய்வு பல சுவாரசியமான தகவல்களைக் கொண்டுள்ளது. பதிவு செய்யப்பட வேண்டிய இத்தகவல்கள் நூலாக வெளிவரவிருப்பது மிகச் சிறப்பு," என்றார் முனைவர் சுப. திண்ணப்பன்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் உயரிய கலாசார பதக்கத்தைத் தமிழ் முஸ்லிம்கள் சிங்கை முகிலன், ஜே.எம்.சாலி, க.து.மு.இக்பால் ஆகியோர் பெற்றுள்ளதைச் சுட்டிய திரு இலியாஸ், ஆங்கிலம், மலாய், அரபு, பர்மிய இலக்கியத்திற்கும் தமிழ் முஸ்லிம்கள் பங்களித்தனர் என்றார்.

