சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா கரடி, ஓர் ஆண் கரடியாகும். அதற்குப் பெயர் தேடும் படலம் நடைபெற்று வருகிறது.
ராட்சத பாண்டா கரடிகளான காய் காய், ஜியா ஜியா இரண்டுக்கும் குட்டிப் பாண்டா கரடி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிவர் சஃபாரி சுற்றுலா தலத்தில் பிறந்தது. அதன் பெற்றோர் ஏழு முறை பிள்ளைப் பேற்றுக்கு முயன்ற பின்னர், இக் குட்டி பிறந்துள்ளது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் கரடி பராமரிப்புக் குழு பலமுறை கண்வழி சோதனைகளை நடத்தி குட்டியின் பாலினத்தை கண்டறிந்தது. பிறகு, சீனாவின் ராட்சத பாண்டா பாதுகாப்பு ஆய்வு மையத்தின் நிபுணர்களுடன் அது உறுதிசெய்யப்பட்டது.
குட்டியை அதன் தாயார் ஜியா ஜியா தாங்கள் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகப் பராமரித்து வருவதாக விலங்கியல் தோட்டத்தின் துணைத் தலைமை நிர்வாகியும் அதன் தலைமை உயிர் அறிவியல் துறை அதிகாரியுமான டாக்டர் செங் வென்-ஹோர் கூறினார்.
தாய் - சேய் பிணைப்பை வலுப் படுத்துவதற்காக, எவ்வளவு காலம் முடியுமோ அதுவரை 12 வயது ஜியா ஜியாவிடமே அதன் பிள்ளை வளர்வதற்கு பாண்டா கரடி பராமரிப்புக் குழு முடிவு செய்துள்ளதாக டாக்டர் செங் தெரிவித்தார்.
பாண்டா குட்டி ஓர் ஆண் என்பது, நேற்று நடைபெற்ற அதன் தந்தை காய் காயின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது.
வரும் 14ஆம் தேதி காய் காய்க்கு வயது 14. குட்டி பிறந்த 100 நாட்களுக்குள், அதாவது நவம்பர் 21ஆம் தேதிக்குள், அதற்கு பெயர் சூட்டப்படும் என்று விலங்கியல் தோட்டம் கூறியது. பொதுமக்கள் செப்டம்பர் 19ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பெயர்களை முன்மொழியலாம்.
தேர்வுசெய்ய முதற்கட்ட பெயர்களிலிருந்து ஒன்றுக்கு பொதுமக்கள் வாக்களிக்கலாம்.
நாடாளுமன்ற நாயகரும் மண்டாய் பார்க் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான திரு டான் சுவான் ஜின் நடுவர் குழுவுக்கு தலைமை வகிப்பார்.
பெயர் கவரக்கூடியதாகவும் எளிதில் நினைவுகூரும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நட்பைக் குறிக்கும் ஒன்றாகவும் இருக்கவேண்டும் என்று விலங்கியல் தோட்டம் கூறியது.

