இன ரீதியாக புண்படுத்தி மாதை உதைத்ததாக கூறப்படும் ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
8233ef30-4b99-4b39-bd44-33095c504bfb
படங்கள்: இந்தோசா நிட்டா விஷ்ணுபாய் -

சிங்கப்பூர் மாது ஒருவரது நெஞ்சில் உதைத்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் மீது வெளிக்கிழமை (செப்டம்பர் 10) குற்றஞ்சாட்டப்பட்டது.

தனியார் துணைப்பாட ஆசிரியரான இந்தோசா நிட்டா விஷ்ணுபாய் எனும் அந்த 55 வயது இந்திய மாதை இன ரீதியாக புண்படுத்தி அவரது மார்பில் கடந்த மே 7ஆம் தேதி உதைத்ததாக வோங் சிங் ஃபோங், 30, மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சுவா சூ காங் வட்டாரத்தில் துரித நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது தமக்கு மூச்சு வாங்குவதைத் தவிர்க்க முகக்கவசத்தை மூக்கிற்குக் கீழ் இறக்கி அணிந்ததாக அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஆடவர் ஒருவர், முகக்கவசத்தை மூக்கிற்கு மேல் அணியுமாறு உரக்கச் சொன்னதாக திருவாட்டி நிட்டா கூறினார்.

தாம் உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பதாக திருவாட்டி நிட்டா அந்த ஆடவரிடம் கூறியபோதும் அந்த ஆடவர் இன ரீதியாக தூற்றியதாகக் கூறப்பட்டது. அந்த இடத்தைவிட்டு திருவாட்டி நிட்டா நகர்ந்து சென்றபோது அந்த ஆடவர் அவரை நோக்கி எட்டி உதைத்ததாகக் கூறப்பட்டது.

இதில், நிலைதடுமாறி திருவாட்டி நிட்டா கீழே விழுந்ததில் அவருக்கு கை முட்டியிலும் கைகளிலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. அதையடுத்து அவர் போலிசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.