வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிவகை செய்து தரப்படுகிறது.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் முதல் தடுப்பூசியை அவர்கள் போட்டுக்கொள்ள இரு வழிகள் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன.
சாங்கி விமான நிலையம் மற்றும் தானா மேரா படகு முனையம் வழியாக சிங்கப்பூர் வந்திறங்கும் வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களுக்கான இந்த இரு வழிகள் ஏற்படுத்தித் தரப்படுவதாக வெளியுறவு அமைச்சும் சுகாதார அமைச்சும் சனிக்கிழமை (செப்டம்பர் 11) தெரிவித்துள்ளன.
முதல் வழியின்கீழ், சிங்கப்பூரர்கள் இங்கு வந்திறங்கியவுடன் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். பிரத்தியேக வசிப்பிடத்தில் தங்குவதற்கான முழு உத்தரவை அவர்கள் நிறைவேற்ற தேவையில்லை. அடுத்த விமானம் அல்லது படகில் அவர்கள் வசிக்கும் நாட்டிற்குத் திரும்பலாம்.
இதே நடைமுறையைப் பின்பற்றி அவர்கள் இங்கு இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம்.
இரண்டாவது வழியின்கீழ், சிங்கப்பூரர்கள் இங்கு வந்திறங்கியவுடன் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு பிரத்தியேக வசிப்பிடத்தில் தங்கும் முழு உத்தரவை நிறைவேற்றலாம்.
இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான நேரம் வரும்போது அதைப் போட்டுக்கொண்டு அவர்கள் வசிக்கும் நாட்டிற்குத் திரும்பலாம்.
ஆனால், ஏற்கெனவே நடப்பில் உள்ள எல்லை நடைமுறைகள் இத்தகைய பயணிகளுக்குப் பொருந்தும்.


