செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e7fc6e30-65e1-437e-a33e-7a2dbef6b48d
-

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான கடை

புக்கிட் பாத்தோக்கில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்காகக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வீவக புளோக்கின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கடை, மாற்றியமைக்கப்பட்ட 'பாம்ப் ஷெல்டர்' எனப்படும் வெடிகுண்டுத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு நிலவறைப் பகுதியில் அமைந்துள்ளது.

சமூக முயற்சியான இந்தக் கடை, ஒருங்கிணைந்த சமூக சேவை நிலையமாகவும் செயல்படும். ஜேம்பேக்ட் எட் புக்கிட் பாத்தோக் என்றும் அழைக்கப்படும் இந்நிலையம், ஜாமியா சிங்கப்பூர், புக்கிட் பாத்தோக் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டுத் திட்டம்.

நேற்று கடையின் திறப்பு விழாவில் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளையும் மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னமும் கலந்துகொண்டனர்.

டிபிஎஸ் வங்கிக்கு உலக விருது

டிபிஎஸ், உலகின் ஆகச் சிறந்த வங்கியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் யூரோமனி சஞ்சிகை டிபிஎஸ்ஸுக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக டிபிஎஸ் ஆகச் சிறந்த வங்கியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆகச் சிறந்த மின்னிலக்க வங்கியாகவும் யூரோமனி டிபிஎஸ்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்விரு விருதுகளையும் ஒரே ஆண்டில் பெற்ற முதல் வங்கி என்ற பெருமை டிபிஎஸ்ஸைச் சேரும்.

புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடவும் மின்னிலக்க அம்சங்களில் பிறரை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பதற்கும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், கொள்ளை நோய்ப் பரவலைச் சாதகமாகப் பயன்படுத்தியதாக யூரோமனியின் ஆசிரியர் லூயிஸ் போமன் கூறினார்.

இனவாதத் தாக்குதல் விவகாரம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கடந்த மே மாதம் சிங்கப்பூர் இந்தியப் பெண்ணைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே மாதம் ஏழாம் தேதியன்று

30 வயது வோங் சிங் ஃபோங், தனியார் துணைப்பாட ஆசிரியான ஹிண்டோச்சா நீத்தா விஷ்னுபாயின் நெஞ்சில் உதைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. வோங், 55 வயது திருவாட்டி நீத்தாவை தகாத வார்த்தைகளால் இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தான் தாக்கப்பட்டதாக இரண்டு வளர்ந்த மகன்களுக்குத் தாயான திருவாட்டி நீத்தா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.

இன நீதியான காரணங்களால் மோசமான தாக்குதலில் ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், வோங்கிற்கு அதிகபட்சமான நான்கரை ஆண்டுச் சிறைத் தண்டனையும் 7,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம். ஒருவரை இன ரீதியாகப் புண்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மூவாண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.