உபின் தீவின் சிறப்பிற்கு மெருகூட்ட அங்கு புதிய தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இத்தோட்டத்தில் பொதுவாக நீர்ப்பகுதிகளில் வளரும் மரங்கள் வளர்க்கப்படும்.
இதன் மூலம் உபின் தீவின் கடற்கரைப் பகுதியை மேம்படுத்துவது இலக்கு.
தோட்டத்தில் இவ்வாண்டிறுதிக்குள் சுமார் 500 மரங்கள் வளர்க்கப்படும். அவை தீவில் இயற்கையாக வளரும் 70 வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும்.
பிறகு மரங்கள் தீவின் கடற்கரைப் பகுதிகளுக்கு இடம் மாற்றப்படும்.
நகர மேம்பாட்டுப் பணிகளால் தீவு சற்று இழந்திருக்கும் இயற்கை அழகை மீண்டும் சேர்ப்பது இதன் இலக்கு.
சிங்கப்பூர் தீவில் மேற்கொள்ளப்படும் இயற்கை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அம்மரங்கள் பயன்படுத்தப்படும். மரங்கள் நடும் பணியைத் தொடங்கிவைக்க தோட்டத்தில் இம்மாதம் 50 கடற்கரை மரங்கள் நடப்படும்.
உபின் தீவில் உள்ள 'உபின் லிவிங் லேப்' ஆய்வுக் கூடத்தின்கீழ் தோட்டம் அமைகிறது.
இயற்கை ஆய்வுகள், சுற்றுச்சூழல் கல்வி போன்றவற்றுக்காக இந்த ஆய்வுக்கூடம் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோர் அரியவகை செடிகளை நட்டு தோட்டத்தை நேற்று திறந்துவைத்தனர். மரம் நடுவது உள்ளிட்ட இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைளின் மூலம் உபின் தீவின் முக்கிய இயற்கைப் பகுதிகளையும் கட்டமைப்புகளையும் கட்டிக்காப்பது இப்பகுதிக்குச் சொந்தமான அரிய வகை உயிரினங்கள் நீண்ட காலம் வாழ உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் திரு லீ குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்தின் பாதிப்புக்கு எதிராகப் போராட மீண்டும் வனப் பகுதியை உருவாக்குவது பங்கு கைகொடுக்கக்கூடும் எனத் திருவாட்டி ஃபூ கூறினார்.