கொவிட்-19 தொற்று ஏற்பட்ட 51 வயது திரு புவனேஸ்வரம் ரகுராம், வீட்டில் இருந்தபடி குணமடையும் திட்டம் தனக்குத் தேவையான நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
முதலில் திட்டத்தை மேற்கொள்ள அவரது வீடு உகந்ததா என்பதை சுகாதார அமைச்சு அவருடன் உறுதிப்படுத்திக்கொண்டது. திட்டத்தின்கீழ் அவர் ஒரே அறையில் இருக்கவேண்டும், குடும்பத்தார் வீட்டின் இதர பகுதிகளில் இருக்கவேண்டும்.
அவர் தொடர்புகொள்ள ஓர் உதவியாளரை அமைச்சு நியமித்தது. மெய்நிகர் வாயிலாக எவ்வாறு மருத்துவச் சேவைகளை நாடுவது, திடீரென உடல்நலம் குன்றினால் என்ன செய்வது போன்ற அம்சங்கள் குறித்து திரு ரகுராமிற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதிகாரிகள் தினமும் தன்னுடன் தொடர்பில் இருந்ததாக அவர் கூறினார்.
முகக் கவசங்கள், உடல் வெப்பநிலையைக் காட்டும் வெப்பமானி, கை சுத்திகரிப்பான், குப்பைப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்த பராமரிப்புப் பொட்டலம் தன்னிடம் வழங்கப்பட்டதாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார். அவரைத் தொடாமல் உணவு வழங்குவது போன்ற செயல்களில் குடும்பத்தார் ஈடுபட உதவும் பொருட்கள் அவை.
ஒரு நாளைக்கு மூன்று முறை திரு ரகுராம் தனது உடல் வெப்பநிலையைச் சோதித்தார்.
மின்னிலக்க முறைகள் வாயிலாகத் தகவல்களை அனுப்பினார்.
கொவிட்-19 கிருமித்தொற்று நீங்கியது உறுதியானவுடன் திரு ரகுராம் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அவருக்குத் தெரியப்படுத்தியது.
குணமடையும்போது தனது குடும்பத்தாரை நேரில் பார்க்கமுடியாவிட்டாலும் அவர்கள் அருகிலே யே இருந்தது நம்பிக்கை அளித்ததாகத் திரு ரகுராம் குறிப்பிட்டார்.
"அவர்களுடன் சேர்ந்து உட்காரவோ உணவவருந்தவோ என்னால் முடியவில்லை, ஆனால் எனது அறையின் கதவுக்கு சில அடி தூரத்தில் அவர்கள் இருந்தது எனக்குத் தெரிந்தது," எனத் திரு ரகுராம் கூறினார்.
உணவை சரியாகக் கொடுப்பது, சிறப்பு மூலிகை பானங்களைத் தருவது போன்ற செயல்களைச் செய்து குடும்பத்தார் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்ததாக அவர் சொன்னார்.

