தொற்றுகால பழக்கம் பிள்ளையை பாதிக்கும்

தொற்றுகால பழக்கம் பிள்ளையை பாதிக்கும்

2 mins read
b69c7583-b8d8-4b1c-951a-f638fda27cba
-

கொவிட்-19 தொற்று காரணமாக பிள்ளைகளின் வளர்ச்சி மேம்பாட்டில் ஏற்படக்கூடிய உண்மையான தாக்கங்கள் அதிகம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

தாமதமான வளர்ச்சி காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20% அதிகமாகி இருக்கிறது என்பது ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

கேகே மாதர், சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை ஆகியவை சென்ற ஆண்டில் ஏறத்தாழ 5,000 பாலர்பள்ளி பிள்ளைகளிடம் இத்தகைய பிரச்சினையைக் கண்டதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இந்த எண்ணிக்கை, சென்ற 2015ஆம் ஆண்டில் 4,000 ஆக இருந்தது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டின் அளவு இரண்டு மடங்காகும். பிள்ளைகளிடம் காணப்பபடும் அத்தகைய ஒரு நிலவரத்தைப் பற்றி பெற்றோர் முன்பைவிட இப்போது சிறந்த முறையில் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் இதுவே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று அமைச்சு கூறியது.

புதிதாக பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 60 விழுக்காட்டினருக்கு பேச்சு, மொழி தாமதப் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொற்று தலைகாட்டியது முதல் அளவுக்கு அதிக நேரம் கைபேசி, தொலைக்காட்சி, கணினித் திரை யிலேயே நேரத்தைச் செலவிடுவதுதொடர்பான பிரச்சினைகள் காரணமாக சிகிச்சைக்கு அதிகம் பேர் வந்திருப்பதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவிக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்த மருத்துவமனையின் சிறார் வளர்ச்சிப் பிரிவின் மூத்த ஆலோ சகர் டாக்டர் ஜெனிஃபர் கிங், ஒரு பிள்ளை வேறு ஒருவருடன் பேசிப் பழகும்போதுதான் பேச கற்றுக் கொள்கிறது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். வெறுமனே திரையைப் பார்த்துக்கொண்டே பொழுதைக் கழிப்பதால் எண், எழுத்து, வடிவங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அப்பா, அம்மா போன்ற பேச்சுகளை உச்சரிப்பது எப்படி என்பதைச் சரிவர கற்றுக்கொள்ள முடியாது என்று அந்த மருத்துவர் விளக்கினார்.

பிறந்து 18 மாதங்கள் ஆகாத குழந்தைகள் காணொளி அழைப்புகளை வேண்டுமானால் பார்க்கலாம்.

ஆனால் கைபேசி, தொலைக்காட்சி போன்ற திரைகளை அறவே பார்க்கக்கூடாது என்று அமெரிக்க குழந்தை மருத்துவப் பயிலகத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கின்றன. பிள்ளைகளிடம் ஏதேனும் பிரச்சினை தெரிந்தால் அவர்களிடம் வளர்ச்சி தாமதம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மதிப்பிட பெற்றோர் காலம் தாழ்த்ததாமல் முன்வர வேண்டும்.

மருத்துவரைப் பார்ப்பதில் கால தாமதம் கூடாது என்று கேகே மருத்துவமனை சிறார் வளர்ச்சித் துறை இணை ஆலோசகர் டாக்டர் கிறிஸ்டில் டான் ஆலோசனை கூறினார்.