துணைப்பாட வகுப்புகள்: இருவழி ஏற்பாடு நீடிக்கும்

துணைப்பாட வகுப்புகள்: இருவழி ஏற்பாடு நீடிக்கும்

2 mins read
ba734067-a1e7-4bf3-a5df-7565f4faa483
-

சிங்கப்பூரில் துணைப்பாட வகுப்புகளைப் பொறுத்தவரை நேரடி, இணையம் என்ற ஏற்பாடு தொடர்ந்து இருந்துவரும் என்று தெரிகிறது.

'மேட்4மேத்' என்ற துணைப்பாட வகுப்பு நிலையத்தை நடத்தி வரும் திருவாட்டி கேரொலின் டான், கொவிட்-19 தொற்று மறைந்த பிறகும் வகுப்புகளில் இணையம் வழியாகவும் நேரடியாகவும் மாணவர்கள் கலந்துகொள்ளும் ஏற்பாடு தொடர்ந்து இருந்து வரும் என்று கருத்து தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தைத் தழுவிக் கொள்வது இவரிடம் பயிலும் மாணவர்களுக்கும் இவருக்கும் நல்ல பலனளிப்பதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது. "என்னிடம் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே நேரடியாக வகுப்புகளுக்கு வருகிறார்கள்.

"மற்றவர்கள் ஸூம் மூலம் கலந்துகொள்கிறார்கள்," என்று இவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

"எல்லா மாணவர்களுக்குமே இணைய வகுப்புகள் ஒத்துவரும் என்று சொல்ல முடியாது.

"குறிப்பாக சில சிறார்களைப் பொறுத்தவரை, ஸூம் வழி படிப்பது சிரமமாக இருக்கிறது," என்று திருவாட்டி டான் தெரிவித்தார்.

இவரிடம் படிக்கும் மாணவர்களில் ஒருவான ஷெர்ஸ் சியா, 16, இணையம் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்வதால் தனக்கு ஏறத்தாழ 3 மணி நேரம் மிச்சமாகிறது என்று தெரிவித்தார்.

போக்குவரத்து தேவையில்லாமல் போவதால் தூங்குவதற்கு அதிக நேரம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.

சென்ற ஆண்டில் கொவிட்-19 சூழ்நிலை மோசமானதால் அவர் படிக்கும் துணைப்பாட நிலையம் முற்றிலும் இணைய வழி போதனை முறைக்கு மாறியது. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் அந்த மாணவி கலந்துகொள்ளும் வகுப்புகள் உள்ளிட்ட சில வகுப்புகள் இரு பாணி முறைக்கு மாறி இருக்கின்றன.

சில மாணவர்கள் நேரடியாக வந்து வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் ஸூம் மூலம் படிக்கிறார்கள்.

மாணவி ஷெரிஸைப் போன்ற சில மாணவர்களைப் பொறுத்தவரை, நேரடியாக துணைப்பாட வகுப்புகளில் கலந்துகொள்வது இப்போதெல்லாம் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை என்று தெரிகிறது.

எதிர்காலத்தில் இணையம் வழி அல்லது நேரடியாக மாணவர்கள் கலந்துகொள்ளும் வகுப்புகள் வழமையாகிவிடும் என்பதால் பிள்ளைகளுக்கு எந்த முறை சிறப்பாகப் பலனளிக்கும் என்பதை மாணவர்களும் பெற்றோரும்தான் முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்று துணைப்பாட வகுப்பு ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.