கூசு தீவு சமய விழாவுக்கு தினமும் 500 பேர் வரை மட்டுமே அனுமதி

கூசு தீவு சமய விழாவுக்கு தினமும் 500 பேர் வரை மட்டுமே அனுமதி

2 mins read
c1abc4f3-659c-470b-844f-5642a87f6ec2
-

கூசு தீவில் சுமார் ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட இருக்கும் புனிதப் பயணத்துக்கான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் நில ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தத் தீவில் துவா பெக் கோங் சீனக் கோவில் உள்ளது. இது தவிர, மலாய் வழிபாட்டுத்தலங்கள் மூன்று அங்கு உள்ளன.

அக்டோபர் 6 முதல் நவம்பர் 4 வரை அங்கு நடைபெறும் சமய விழாக்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாள்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே கூசு தீவு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தீவுக்குச் செல்லும் பயணப் படகு ஒன்றில் 50க்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை என்று ஆணையம் இன்று கூறியது.

காலை 7 மணி தொடங்கி மாலை 4 மணி வரை படகு சேவை நடைபெறும். மணிக்கொரு பயணப் படகு அந்தத் தீவிற்குச் செல்லும். கடந்த ஆண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் எத்தகைய விதிமுறைகள் இந்த விழாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டனவோ கிட்டத்தட்ட அதேபோன்ற விதி முறைகள் தற்போதும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கூசு தீவு சமய விழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் செல்வது உண்டு. இவ்வாண்டு இந்த விழாவுக்குச் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகளை நாளை 14ஆம் தேதி முதல் சிங்கப்பூர் தீவு உல்லாப் பயணப் படகு சேவை (எஸ்ஐசி) இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது சிங்கப்பூர் நில ஆணையத்தின் கியூஆர் குறியீட்டை வருடி நுழைவுச்சீட்டு பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரை 16 வெள்ளியாகவும் வார இறுதிகளில் 18 வெள்ளியாகவும் அந்தக் கட்டணம் இருக்கும்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் 12 வெள்ளி. படகில் ஏறுமுன்னர் பயணிகள் அனைவரும் டிரேஸ்டுகெதர் சாதனம் அல்லது செயலி மூலம் வருகைப் பதிவை மேற்கொள்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.