முதல் இரண்டு கப்பல் நிறுத்தும் இடங்கள் (பெர்த்துகள்) துவாஸ் துறைமுகத்தில் திட்டமிட்டபடி இவ்வாண்டிறுதியில் திறக்கப்படும். இது சிங்கப்பூரின் கப்பல் வர்த்தகத்தின் நிலையை உயர்த்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
குடிநுழைவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்படி, சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் கப்பல்களும் நங்கூரமிட நியமிக்கப்பட்ட இடம் துவாஸ் துறைமுகம்.
அடிப்படை வசதிகள், முனைய வாசல்கள், கட்டடங்கள், பராமரிப்பு தளங்கள் போன்றவற்றின் மேம்பாட்டுப்பணிகள் சீராக நடைபெற்று வருவதாகத் துறைமுகத்தை இயக்கும் 'பிஎஸ்ஏ' ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.
மேம்படுத்தப்பட்ட துறைமுகச் சாதனங்கள் வந்தடைந்துவிட்டதாகவும் அது கூறியது. $20 பில்லியன் மதிப்புள்ள இந்த மாபெரும் துறைமுகத்துக்கு (மெகா போர்ட்), நான்கு கட்டங்கள் உள்ளன.
தானியக்கக் கப்பல்துறை மேடையும் (வார்ஃப்) போன்ற வசதிகளுடன் 2040ல் முழுமை காணவிருக்கும் மாபெரும் துறைமுகம், உலகிலேயயே ஆகப் பெரிய தானியக்க முனையமாகத் திகழும்.
கப்பல்கள் நிறுத்த ஆழமான இடங்களும் (பெர்த்) பெரிய கப்பல் கொள்கலன்களுக்கு வழிவகுக்க நீண்ட இடங்களும் இடம்பெறும்.
மாபெரும் துறைமுகத்தில் தற்போதைய அளவைவிட, துவாஸ் துறைமுகத்தால் இருமடங்கு அளவு சரக்குகளைக் கையாள முடியும்.
முதல் கட்ட மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் முடிவு பெறும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
2027க்குள் முடிவு பெறவிருக்கும் முதல் கட்டம், 21 பெர்த்துகளைக் கொண்டிருக்கும். இது 20 மில்லியன் 'டிஇயு' சரக்குகளைக் கையாளும்.
உற்பத்தித்திறனையும் சேவைத் தரத்தையும் உயர்த்த தாங்கள் தொழில்நுட்பத்திலும் தானியக்கத்திலும் குறிப்பிடத்தக்க முதலீடு செய்து வருவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட் கூறினார்.
இவை, கடல்துறை, விநியோகச் சங்கிலி, உற்பத்தித்துறை, தளவாடத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய துறைமுகம் பசுமையான ஒன்றாகவும் 2050க்குள் கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலும் இல்லாததைக் இலக்காகக் கொண்ட ஒன்றாகவும் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன் தமது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவிட்டார்.
இவ்வாண்டிறுதியில் திறக்கப்படவிருக்கும் பெர்த்துகள் துறைமுகம் கையாளக்கூடிய கொள்கலன் சரக்கு அளவை உடனடியாக கூட்டும் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் திரு ரேமண்ட் ஓங் கூறினார்.
சுற்றி அமைந்துள்ள துறைமுகங்களுக்கிடையே உள்ள போட்டி சிங்கப்பூருக்குச் சாதகமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த்தொற்றிலும் கொள்கலன் வர்த்தகத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து சிறப்பாய் இயங்கி வருகிறது என்றும் துவாஸ் துறைமுகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முனைவர் யாப் கூறினார்.

