கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவானதைத் தொடர்ந்து சிராங்கூனில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி நிலையம் மூடப்பட்டு உள்ளது. சுத்திகரிப்புப் பணிகள் முடிந்த பின்னர் செப்டம்பர் 21ஆம் தேதி அது மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் @ பிரேடல் ஹைட்ஸ் என்னும் அந்த நிலையம் புளோக் 335 சிராங்கூன் அவென்யூ 3 என்னும் இடத்தில் உள்ளது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தால் அங்கீரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிறுவனம் அங்கு நேற்று முதல் தீவிர தூய்மை மற்றும் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடபட்டு வருகிறது.
மீண்டும் திறக்கப்படுமுன் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்று 'பிசிஎஃப்'பின் பாலர் பள்ளி நிர்வாகப் பிரிவின் மூத்த இயக்குநர் மரினி காமிஸ் கூறினார்.
மேலும் நிலையத்தின் அடுத்தகட்டப் பணிகள் பாதிக்கா வண்ணம் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அது மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அவர் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும் உடல்நிலை பாதிக்கப்படும் குழந்தைகள் முழுமையாகக் குணமடையும் வரை தங்களது வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிய திருவாட்டி மரினி, பிள்ளைகளின் சுகாதாரத்தில் கவனம் செலுத்துமாறும் அவர்களின் உடல்நலன் குன்றினால் உடனடியாக மருத்துவக் கவனிப்பை நாடுமாறும் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார். பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் @ பிரேடல் ஹைட்ஸ் கிருமித்தொற்றுக் குழுமத்தில் ஏற்கெனவே 19 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒரே வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இடையில் தொற்று பரவியதாக அமைச்சு தெரிவித்திருந்தது.

