சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் (எஸ்சிடிஎஃ) சென்றடையும் போலியான அவசர உதவி அழைப்புகளும் அவசர உதவி தேவைப்படாத அழைப்புகளும் இவ்வாண்டின் முற்பகுதியில் கணிசமான அளவு குறைந்துள்ளன.
நோய்த்தொற்றின் காரணமாக அதிகமானோர் வீட்டிலேயே இருப்பதும், மக்களிடையே அதிகரித்துள்ள விழிப்புணர்வும் இதற்குக் காரணம். அவசர மருத்துவ சேவை தேவைப்படாதோர், அவசர மருத்துவ சேவைக்கு அழைப்பது 15.4% குறைந்து 4,704லிருந்து 3,978ஆக உள்ளது.
நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில், போலியான அவசர மருத்துவ சேவைக்கு வரும் அழைப்புகள் 16.4% குறைந்து 3,200லிருந்து 2,674ஆக உள்ளது.
இப்புள்ளி விவரங்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்டது. குறைந்துவரும் இம்மாதிரியான அழைப்புகள் அவசர உதவி தேவைப்படுவோருக்கும் உயிருக்குப் போராடுவோருக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு விரைந்து உதவ வழிவகுக்கிறது.
2019ல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை 17,000 போலியான அவசர உதவி அழைப்புகளும் அவசர உதவி தேவைப்படாத அழைப்புகளும் சென்றடைந்தன.
சென்றாண்டு ஏப்ரல் மாதத்திலுருந்து (எஸ்சிடிஎஃ), இடம் மாற்றுதல் சேவை இல்லாத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில், அவசர மருத்துவ சேவை தேவைப்படாதோர், வீட்டின் அருகே உள்ள மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அல்லது அவசர மருத்துவ சேவைகள் தேவைப்படாத நிலையில் 1777 என்ற எண்ணை அழைக்குமாறு ஆலோசனை வழங்கப்படும்.
இது அவசர சேவை தேவைப் படுவோருக்கு எஸ்சிடிஎஃ'யின் வளங்கள் பயன்படுவதை உறுதிப்படுத்தும்.

