சிங்கப்பூர் வான்வெளியில் பரபரப்பு
சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த எஃப்-16 போர் விமானங்கள் நேற்று முன்தினம் கிளம்பிய ஆகாயவெளி அச்சுறுத்தலைச் சமாளிக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டன. "நமது பாதுகாப்பு விட்டுத்தரப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் நமது விமானங்கள் நிலைபெற்றன," என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சனிக்கிழமை காலை 9.20 மணியளவில் அரச மலேசிய போலிஸ் ஹெலிகாப்டர் ஒன்று புலாவ் தெக்கோங் வான்வெளியில் பறந்ததாக இணையம் வழியாகத் தகவல்கள் தெரிவித்தன. புலாவ் தெக்கோங்கில்தான் சிங்கப்பூர் ஆயுதப் படையின் அடிப்படை ராணுவப் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தேசிய சேவையாளர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அந்தப் பகுதியின் மீது தனது விமானம் பறந்தது குறித்து அரச மலேசிய போலிஸ் அறிக்கை ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. செப்டம்பர் 11 அன்று சிங்கப்பூர் ஆகாயவெளியில் எல்லைக் கட்டுப்பாட்டை மீறி எங்கள் விமானம் பறந்ததாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலை அறிந்துள்ளோம்," என்று குறிப்பிட்டது அந்தப் பதிவு. இருந்தபோதிலும் சிங்கப்பூர் ஆகாய வெளியில் மலேசிய ஹெலிகாப்டர் நுழைந்தது தொடர்பாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்குத் தகவல் வரவில்லை என்று மலேசிய போலிஸ் கூறியது. ஆண்டுதோறும் இதுபோல சராசரியாக 350 ஆகாய வெளி அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் அது குறித்து விசாரிக்கவும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை போர் விமானங்கள் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம் என சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் பரிசோதனைச் சாதனம்
விடுமுறையிலிருந்து பள்ளிக்குத் திரும்பும் எல்லாத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இன்று திங்கட் கிழமை முதல் கொவிட்-19 தொற்றுப் பரிசோதனைச் சாதனம் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரும் தலா மூன்று ஏஆர்டி பரிசோதனைப் பொருள்களைப் பெறுவர். பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நான்கு முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இவை வழங்கப்படு வதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். உடல்நலமில்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பது, பள்ளிகளில் பாதுகாப்பு நிர்வாக நடை முறைகள் மற்றும் கொவிட்-19 தொற்றியோரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரையும் உள்ளடக்கும் பாதுகாப்பு பரிசோதனை வளையம் போன்றவை இதர அணுகுமுறைகள். இந்த வாரத்தில் எல்லா மாணவர்களும் தங்களது வீடுகளில் சுய பரிசோதனை செய்வதை அவர்களின் பெற்றோர் ஊக்குவிக்குமாறு திரு சான் கேட்டுக்கொண்டுள்ளார்.

