சிங்கப்பூர் கொவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த சுகாதாரத் துறை செய்தியாளர் சல்மா காலிக் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
அந்தக் கட்டுரை நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியானது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு வழி இல்லை. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நீண்ட நெடுங்காலத்திற்கு நடைமுறைப்படுத்தி வந்தால் தொற்றுப் பரவல் வேகத்தைக் குறைக்கலாம். இதையே இப்போது சிங்கப்பூர் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
முடிவில் தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாமல் இருந்தாலும் மக்களில் பெரும்பாலானவர்கள் தொற்றை எதிர்நோக்க வேண்டிய சாத்தியம் இருப்பதாக அவர் கருத்து கூறியுள்ளார்.
சிங்கப்பூர் தன்னுடைய மக்கள்தொகையில் 81 விழுக்காட்டினருக்கு முற்றிலும் தடுப்பூசி போட்டு இருக்கிறது என்றாலும் புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று அரசாங்கம் சென்ற திங்கட்கிழமை தெரிவித்ததை அவர் சுட்டினார்.
சென்ற வெள்ளிக்கிழமை சமூகத்தில் புதிதாக 568 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 550 ஆக இருந்தது என்பதையும் அவர் சுட்டினார்.
இன்னும் இரண்டு வாரங்களில் எவ்வளவு பேர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டாலும் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களிடம் கடுமையான பாதிப்பும் மரணமும் மிக மிகக் குறைவு என்பதை கோடிட்டு காட்டிய அவர், சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மரணமடைந்திருக்கும் 58 பேரில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஒரே ஒருவர்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ ரீதியில் பொருத்தமானவர் என்று தெரிய வரும் அனைவருக்கும் தடுப்பூசியை அரசாங்கம் கட்டாயமாக்குவதற்கு இது அநேகமாக சரியான நேரமாக இருக்கிறது என்று தெரிவித்த திருவாட்டி சல்மா காலிக், கட்டாய தடுப்பூசி ஒரு புதிய கோட்பாடு அல்ல என்பதையும் தன் கட்டுரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

