பன்னாட்டு உறவுகள், அரசியல் களம், நடப்பு விவகாரங்கள் போன்ற அம்சங்களில் சஞ்சீவன் செல்வத்திற்கு அதிக ஈடுபாடு உண்டு.
தினமும் அதன் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தீராத தாகம், இதுதான் என் பணி இது தொடர்பான வேலையிலேயே வேண்டும் என்ற வேட்கையை அவரிடம் தூண்டியது.
கடந்த ஆண்டு விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் மேல் நிலை தேர்வு எழுதிய பிறகு, எந்த உபகாரச் சம்பள விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று யோசித்த போது, தம் விருப்பத்திற்கு ஏற்ப தற்காப்பு துறையில் சேர்வதே சரி என்று சஞ்சீவன் முடிவெடுத்தார்.
கடந்தாண்டு சிங்கப்பூர் ஆயுதப் படையின் தற்காப்பு தகுதி உபகாரச் சம்பளத்திற்கு இவர் விண்ணப்பித்தார். இவ்வாண்டு அடிப்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உபகாரச் சம்பளம் கிடைத்துள்ளது என்ற நற்செய்தி கிடைத்தது.
இவ்வாண்டு தற்காப்பு அமைச்சின் தற்காப்பு தகுதி உபகாரச் சம்பளம் பெற்ற 14 பேரில் ஒரே இந்திய இளையர் சஞ்சீவன் ஆவார்.
உபகாரச் சம்பளத்தின்படி, இவர் பட்டப்படிப்பு முடித்த பிறகு தற்காப்பு அமைச்சில் தற்காப்பு நிர்வாக அதிகாரியாக (DXO) பணிபுரிவார்.
"உயர்நிலைப் பள்ளியிலிருந்து வரலாறு, இலக்கியம் போன்ற பாடங்கள் சிங்கப்பூரையும் உலகத்தையும் பற்றி ஆழமாக சிந்திக்க உதவின. இப்போது என் எதிர்காலப் பணியில் அனைத்துலகக் கண்ணோட்டத்தில் சிங்கப்பூரின் பங்களிப்பு என்ன என்பதை ஆராயும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார் சஞ்சீவன்.
சிங்கப்பூர் ஆகாயப் படையில் தேசிய சேவை செய்துவரும் இவர், 2023ஆம் ஆண்டில் உள்ளூரிலோ வெளிநாட்டிலோ உள்ள ஒரு பல் கலைக்கழகத்தில் அரசியல், பன்னாட்டு உறவுகள் தொடர்பிலான பட்டப்படிப்பை மேற்கொள்வார்.
பட்டப்படிப்பு முடிந்தபின், தற்காப்புக் கொள்கைகளை வகுத்தல், தற்காப்பு அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்தை நிர்வகித்தல், மனிதவளத்தை நிர்வகித்தல் போன்ற வெவ்வேறு பிரிவுகளில் இவர் அனுபவம் பெற வாய்ப்பு உள்ளது.
"கொவிட்-19 நோய், பருவநிலை மாற்றம், இணையத்தில் பாதுகாப்பு சவால்கள் போன்றவை சிங்கப்பூரை மட்டுமல்லாது உலகத்தையே பாதிக்கின்றன. இதுபோன்ற சவால் களைச் சமாளிக்க, தற்காப்பு அமைச்சின் இணையப் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முற்படுவது போன்றவற்றில் ஈடுபட்டு, எதிர்கால சிங்கப்பூருக்குப் பங்களிக்கப் போவதில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார் 19 வயது சஞ்சீவன்.
தாம் மேற்கொள்ளவிருக்கும் பட்டப்படிப்பு உலக விவகாரங் களைப் பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும் என்று நம்பும் இவர், மாறிவரும் உலகச் சூழலில் சிங்கப்பூரின் பாதுகாப்பையும் அமைதியையும் நிலை நாட்டுவதில் பங்களிக்க ஆவலுடன் இருக்கிறார்.
செய்தி: ப.பாலசுப்பிரமணியம்

