ப. பாலசுப்பிரமணியம்
உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்து ராணுவ மருத்துவ அதிகாரியாக சேவையாற்றுவதை வெ.குமரேஷ் நடராஜன் கனவாகக் கொண்டிருந்தார்.
ஒருமுறை, தாம் பயின்ற செயிண்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வேலைச் சந்தையில் முன்னாள் மாணவர்கள் தங்களது வேலை அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
அங்கு ராணுவ மருத்துவ அதிகாரி ஒருவர், அனைத்துலக நிவாரணப் பணியில் ஈடுபட்ட அனுபவங்களைப் பகிர்ந்தபோது, இதுதான் தமக்கு ஏற்ற பாதை என்று 16வது வயதில் முடிவெடுத்தார் குமரேஷ்.
மேல்நிலை தேர்வுக்குப் பிறகு சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழக மருத்துவ துறையில் பயில விண்ணப்பித்தார் ஆனால் குமரேஷுக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் தாம் அடைய விரும்பிய பிரசித்திபெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ உபகாரச் சம்பளத்தைப் பெறும் வாய்ப்பும் மங்கியது.
இருப்பினும் குமரேஷ் மனம் தளரவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய சேவையைத் தொடங்கிய இவர், பயிற்சி அதிகாரி பள்ளிக்கு (OCS) முன்னேறி, '1 கார்ட்ஸ்' ராணுவப் படைப் பிரிவின் தலைவராக சேவையாற்றினார்.
சேவை காலத்திற்குப் பிறகு ஓராண்டாக செயிண்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்த
குமரேஷ், 2018ஆம் ஆண்டில் டப்லின் நகரில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் மருத்துவத் துறை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
அங்கு படித்தபோதும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறை படிப்பும் ஆயுதப் படை உபகாரச் சம்பளமும் வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிட வில்லை.
"வெளிநாட்டுப் படிப்பின் முதலாம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயில விண்ணப்பித்தேன், இடம் கிடைக்கவில்லை. மறுஆண்டான 2020ஆம் ஆண்டில் மீண்டும் முயன்றபோதுதான் இடம் கிடைத்தது," என்று அந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூர்ந்தார் 25 வயது குமரேஷ்.
அதற்கு மறுநாளே சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அதிலும் வெற்றி!
இவ்வாண்டு 8 பேருக்கு கிடைத்த சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ உபகாரச் சம்பளம் விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
வரும் 2024ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவப்படை பிரிவில் சேவையாற்ற குமரேஷ் காத்திருக்கிறார்.
ஆப்கானிய அகதிகளைப் பாதுகாப்பான நாடுகளுக்கு கொண்டு செல்வதில் சிங்கப்பூர் ஆயுதப் படை பங்களித்ததை இந்த இளையர் அறிவார். இதுபோன்ற அனுபவங்கள் கிடைத்தால் தமது வாழ்க்கை மேலும் செழுமையாகும் என்று குமரேஷ் நம்புகிறார்.

