இந்து இளங்கோவன்
பாரதியாரின் பாடல்கள் பெரும்பாலும் கர்னாடக இசையிலும் திரைப்படப் பாடல் வடிவிலும் கிடைக்கப் பெறுகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின்போது தமிழ் முரசின் ஏற்பாட்டில் நடந்த இசைநிகழ்ச்சியில் பாக்ஸ்சைல்ட், ராகாஸாஸ் இசைக்குழுக்கள் ராக், ஜாஸ் பாணிகளில் பாரதியின் பாடல்களைப் பாடியிருந்தனர்.
இவ்வாறு, காலத்துக்கு ஏற்ப பாரதியின் பாடல்களுக்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ள நீண்ட வரிசையில் இசைக்
கலைஞர் வேணுகோபாலும் இணைந்துள்ளார்.
தாம் கேட்டு, படித்து, ரசித்த கவிதை களின் சுவையையும் ஆழ்ந்த பொருளையும் இன்றைய இளையர்ளும் உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களைக் கவரும் வகையில் 'மெட்டல்' இசை பாணியில் இப்பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் வேணுகோபால், 41.
இப்பாடல்களை இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறும் 'என் நினைவில் பாரதி' என்னும் இணைய நிகழ்ச்சியில் கேட்டு மகிழலாம்.
இந்த நிகழ்ச்சிக்காகவே சகோதரர்களான தமது நண்பர்கள் மோஷிகன் முனியாண்டி, தரணி முனியாண்டியுடன் சேர்ந்து புதிதாக 'பாரதி ப்ரதர்ஸ்' என்ற இசைக் குழுவை அவர் அமைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல உள்ளூர் புல்லாங்குழல் கலைஞர் நிரஞ்சனின் 'பிரம்மாஸ்திரா' இசைக்குழுவினர், தேசிய கலைகள் மன்றத்தின் இளம் கலைஞர் விருதை வென்ற சுஷ்மா சோமா, லலித் குமார் ஆகியோரும் 'பாரதி ப்ரதர்ஸ்', இசைக்குழுவுடன் பங்கேற்கவுள்ளனர்.
'பாயும் ஒளி நீ எனக்கு', 'குயில் பாட்டு', 'நல்லதோர் வீணை' போன்ற புகழ்பெற்ற பாரதியார் கவிதைகளை மாறுபட்ட பாணியில் படைக்கவுள்ளனர் இவர்கள்.
"இன்று நாம் சிங்கப்பூரில் பரவலாக பேசக்கூடிய இன, சமய நல்லிணக்கம், பெண் முன்னேற்றம் போன்ற அம்சங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமது கவிதைகளில் பாரதி கூறிவிட்டார்.
"இன்றளவும் பாரதியின் கவிதைகள் இளையர்களுக்கு நெருக்கமாக இருப்பவை. இருப்பினும், அவை நமது இளையர்களை முழுமையாக அடையவேண்டும் என்றால் பள்ளியில் பாடமாகக் கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது.
"அவற்றை புதிய வடிவங்களில் அளித்துக் கொண்டே இருக்கவேண்டும்." என்றார் வேணுகோபால்.
சுப்பிரமணிய பாரதியார் மறைந்து செப்டம்பர் 11ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு தேசிய நூலக வாரியம் 'பாரதி நூற்றாண்டு' எனும் விழாவை நடத்தவிருக்கிறது. நூலக வாரியம் ஏற்பாடு செய்துள்ள 12 நிகழ்ச்சிகளில் இளையர்கள் படைக்கும் இந்த இசை நிகழ்ச்சியும் ஒன்று.
'பாரதி நூற்றாண்டு' விழாவை ஒட்டி நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த இணையப்பக்கத்தை நாடலாம்: www.facebook.com/groups/TamilLibraryServices.SG/

