பக்கவாதத்தால் பாதிப்பு; கப்பல் பணியாளர் மீட்பு

பக்கவாதத்தால் பாதிப்பு; கப்பல் பணியாளர் மீட்பு

1 mins read
5ecf46c5-c0ea-4019-ae60-899f808a3e9d
படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் -

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனக் கூறப்பட்டதை அடுத்து, கப்பலில் இருந்து அதன் ஊழியர் ஒருவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் இன்று அதிகாலை மீட்டனர்.

பின்னிரவு 1.30 மணியளவில் மருத்துவ உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, குடிமைத் தற்காப்புப் படை இரு மீட்புக் கப்பல்களை அனுப்பியது.

சிங்கப்பூரின் கிழக்குக் கடற்பகுதியில் அக்கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.

அவசரகால மருத்துவத் தொழில்நுட்பர்கள் இருவர் உட்பட குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறை நிபுணர்கள் எழுவர் மருத்துவக் கருவிகளுடன் மீட்புப் பணிக்காக அந்தக் கப்பலுக்குள் புகுந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆடவர் கப்பலின் முதன்மைத் தளத்தில் சுயநினைவுடன் இருந்ததை அவர்கள் கண்டனர்.

"அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அவரது உடலின் வலப்பகுதி மரத்துப்போய், உணர்ச்சியற்று காணப்பட்டது," என்று குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. படையின் கடல்துறை நிபுணர்கள் அவரைக் கவனமாக மீட்டு, தூக்குப் படுக்கையில் கிடத்தி, பின்னர் தாங்கள் வந்த ஒரு மீட்புக் கப்பலுக்கு மாற்றினர்.

"கடும் காற்று, கடல்நீரோட்டத்திற்கு இடையில் மீட்புப் பணி மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட்டது. பாரந்தூக்கியை இயக்கியவர்க்குக் கடல்துறை நிபுணர்கள் தொடர்ந்து தகவல் கொடுத்தவாறே, ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட ஆடவரை மீட்டனர்," என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அதன்பின் அந்த ஆடவர் தானா மேரா படகு முனையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவசர மருத்துவ ஊர்தி மூலமாக சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.