மோசடி செய்து மானியம் பெற்ற பெண்ணுக்குச் சிறை

மோசடி செய்து மானியம் பெற்ற பெண்ணுக்குச் சிறை

2 mins read
968d528c-c390-44f4-851e-d9ef6400e867
-

போலி ஆட்குறைப்புக் கடிதத்தின் மூலம் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி, கொவிட்-19 ஆதரவு மானியமாக $4,000 பெற்ற பெண்ணுக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் வேலை இழந்தோர்க்கு உதவுவதற்காக அந்த மானியம் அறிவிக்கப்பட்டது.

டியோங் ஷி லின், 32, என்ற அப்பெண், தமது கொவிட்-19 ஆதரவு மானிய விண்ணப்பத்தில் அந்தப் போலி ஆட்குறைப்புக் கடிதத்தின் படத்தை இணைத்து அனுப்பியிருந்தார்.

தமது நிறுவனம் தமக்கு வழங்கிய மடிக்கணினியில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரிசெய்வதற்காக அதைச் சக ஊழியரிடம் கடந்த நவம்பர் மாதம் ஒப்படைத்தபோது, டியோங்கின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

தன்மீதான இரண்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளையும் ஒரு மோசடிக் குற்றச்சாட்டையும் டியோங் ஒப்புக்கொண்டார்.

2019 அக்டோபர் முதல் 2020 பிப்ரவரிவரை 'டிவிஎச் சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் டியோங் வேலை செய்தார். பின்னர் 2020 ஏப்ரலில் 'அஷூரன்ஸ் சிங்கப்பூர்' என்ற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல்-மே காலகட்டத்தில், சமுதாய, குடும்ப அமைச்சை ஏமாற்றி, கொவிட்-19 ஆதரவு மானியம் பெற ஒரு மோசடித் திட்டத்தை வகுத்தார். அதன்படி, 2020 பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து தாம் வேலையின்றி இருப்பதாக அவர் விண்ணப்பித்தார்.

போதிய சான்றாவணங்கள் இல்லாததால் முதலில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 'டிவிஎச்' நிறுவனத்தின் ஆட்குறைப்புக் கடிதத்தைப் படமெடுத்து அனுப்பியதை அடுத்து, அவருக்கு $2,400 மானியம் வழங்கப்பட்டது.

பின்னர் 'அஷூரன்ஸ்' நிறுவனத்தில் இருந்தும் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக ஒரு போலிக் கடிதத்தைத் தயார்செய்து, அதன்மூலமாகவும் டியோங் $1,600 மானியம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.