வர்த்தக கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்கள் கட்டடங்களில் வாடகைக்கு இடத்தை எடுத்து தொழில் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் லாபநோக்கற்ற அமைப்புகளுக்கும் இரண்டு வார வாடகைக் கழிவைத் தர வேண்டும்.
கொவிட்-19 தொற்றுக்கு எதி ரான இரண்டாம் கட்டப் பொருளியல் கட்டுப்பாடுகளால் அந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதே இதற்கான காரணம். அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மாத கால வாடகையை ரொக்கமாக வழங்கப்போவதாக அறிவித்தது. இதையும் சேர்த்து தனியார் கட்டடங்களில் வாடகைக்குத் தொழில் நடத்துவோருக்கு மொத்தம் ஒன்றரை மாத வாடகைக் கழிவு கிடைக்கும்.
'வாடகைக் கழிவு ஏற்பாடு' என்ற ஒரு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்திற்கான உத்தேச திருத்தமாக தாக்கல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு மே 16ஆம் தேதிக்கும் ஜூன் 13ஆம் தேதிக்கும் இடையிலும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையிலும் நடப்புக்கு வந்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட லாபநோக்கற்ற அமைப்புகளுக்கும் உதவுவது அந்தத் திருத்தத்தின் நோக்கம்.
கட்டட உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக் கழிவைப் பெற வேண்டுமானால் வாடகைதாரர்கள் பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் தாக்கலான வாடகைக் கழிவு ஏற்பாடு இதர ஆதரவுத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று சட்ட அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட பொருளியல் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் 'வாடகை ஆதரவு திட்டம்' என்ற ஒரு திட்டம் நடப்புக்கு வந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் முதல் தவணையாக ஆகஸ்ட் 6ஆம் தேதி பணம் கொடுக்கப்பட்டது. அடுத்த மாதம் இரண்டாவது தவணையாக பணம் கொடுக்கப்படும்.
அரசாங்கம், கட்டட உரிமையாளர்கள், வாடகைக்குத் தொழில் நடத்துவோர் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையில் வாடகை கடப்பாடுகள் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளப்படுவதை இந்தப் புதிய ஏற்பாடு உறுதிப்படுத்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
வாடகை ஆதரவு திட்டத்தின்கீழ் இரண்டாவது தவணைப் பணத்தைப் பெற்றிருக்கும் வாடகைதாரர்களுக்கு அடுத்த மாதம் சட்ட அமைச்சு வாடகைக் கழிவுகள் பற்றிய கடிதம் ஒன்றை அனுப்பும்.
அதையும் தேவையான பத்திரங்களையும் சேர்த்து 28 நாட் களுக்குள் கட்டட உரிமையாளர்களிடம் வாடகைதார்கள் அனுப்ப வேண்டும். இதை அனுப்பினால்தான் வாடகைக் கழிவு கிடைக்கும்.
கட்டட உரிமையாளர்கள் எல்லாருமே வாடகைக் கழிவை கொடுக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய அமைச்சு, வாடகைக் கழிவை கொடுக்க இயலாதவர்கள், தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இதற்கு தகுதிபெற அவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். கட்டட உரிமையாளர்களும் வாடகைதாரர்களும் பரஸ்பர ஏற்புடைய உடன்பாடுகளைச் செய்துகொள்ளும்படி ஊக்கமூட்டப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

