செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
92211d8b-3db7-4b81-91f0-b85a9ed45d55
-

இரு மசோதாக்கள்

ஒரே நேரத்தில் விவாதம்

வேலை மற்றும் வெளிநாட்டு ஊழியர் கொள்கை ஆகிய தனித்தனியான இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் ஒரே நேரத்தில் இன்று விவாதிக்கப்படும் என்று மன்றத் தலைவர் இந்திராணி ராஜா நேற்று தெரிவித்தார்.

விவாதங்கள் மிகவும் செம்மையாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த இரண்டு மசோதாக்களும் ஒரே நேரத்தில் விவாதிக்கப்படும். என்றாலும் அவை இரண்டும் தனித்தனியானவை என்றும் அவற்றின் மீது உறுப்பினர்கள் தனித்தனியாக வாக்கு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

வேலை தொடர்பான மசோதாவை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதி இல்லா உறுப்பினர் லியோங் மன் வாய் தாக்கல் செய்துள்ளார். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இரண்டாவது மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.

வட்டார தடுப்பூசி இயக்கம் பொருளியலுக்கு ஊக்கம்

வட்டார நாடுகள் கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துகின்றன. அதன் காரணமாக வரும் காலாண்டு களில் பொருளியல் சூடுபிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள், கொரோனா தொற்று மறுபடியும் தலைதூக்குவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றாலும்கூட வளர்ச்சி சாத்தியம் என்று நேற்று நாடாளுமன்றத்தில் புக்கிட் பாஞ்சாங் உறுப்பினர் லியாங் எங் ஹுவாவுக்கு அளித்த பதிலில் அவர் கூறினார்.

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டில் 6% முதல் 7% வரை வளரும் என்று இப்போது முன்னுரைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்தக் கணிப்பு 4% முதல் 6% வரைப்பட்டதாக இருந்தது. கொவிட்-19 தொற்று காரணமாக ஆபத்துகள் இருந்தாலும் உலகப் பொருளியல் மீட்சி சரியான பாதையில் முன்னேற்றம் கண்டுவருகிறது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக 7.7% ஆக இருந்தது. அதேவேளையில், சிங்கப்பூரின் தடுப்பூசி இயக்கம் நல்ல முன்னேற்றம் கண்டு உள்ளது என்பதை திரு ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இவை கட்டுமானம் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கவும் உணவு, பானம் போன்ற துறைகள் மீட்சி அடையவும் உதவும் என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் பொருளியல் 2022ஆம் ஆண்டி லும் தொடர்ந்து மீட்சி அடையும் என்று வர்த்தக தொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது.

பாதுகாவல் அதிகாரிகளுக்கு அதிகமான பாதுகாப்பு

நாடாளுமன்றத்தில் நேற்று தனியார் பாதுகாவல் தொழில்துறை (திருத்தம்) மசோதா தாக்கலானது. அது பாதுகாவல் அதிகாரிகளுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

அந்த அதிகாரிகள் பணியில் இருக்கும்போது அவர்களை அலைக்கழித்தால், கொடுமைப்படுத்தினால், காயம் விளைவித்தால் அவை புதிய வகை குற்றங்களாக கருதப்பட்டு கடுமையான தண்டனைகள் கிடைக்க திருத்த மசோதா வகை செய்கிறது.

இந்த மாற்றங்களின் தேவை பற்றி விளக்கிய உள்துறை அமைச்சு, பாதுகாவல் அதிகாரிகளில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் வேலையில் இருந்தபோது ஏதோ ஒரு வகையில் தவறாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது ஓர் ஆய்வு மூலம் தெரியவந்து இருப்பதைச் சுட்டிக்காட்டியது.

புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும்போது பாதுகாவல் அதிகாரிகளை யாராவது அலைக்கழித்தால் அவருக்கு $5,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கும்.