பருவநிலை மாற்றம், இரைச்சல் பிரச்சினைகளைச் சமாளிக்க சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகளுக்கு மேலும் ஊக்கம் கிடைக்கஇருக்கிறது.
சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு பிரச்சினைகளைக் கையாளும் ஒரு மசோதாவிற்கான உத்தேச மாற்றங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கலாயின.
காற்றில் கரிமப்புகை கலப்பதைக் கட்டுப்படுத்தும் இப்போதைய முயற்சிகளுக்கு 'சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (திருத்தம்) மசோதா' என்ற அந்தச் சட்டத் திருத்தத்தின்படி மேலும் பலம் கிடைக்கும்.
தேசிய சுற்றுப்புற வாரியம், குறிப்பிட்ட வேலையிடங்களை அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் காணொளி மூலம் கண்காணிக்க ஏதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் வேலைகளை நிறுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஒப்பந்தக்காரர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அந்தத் திருத்தங்கள் உதவும்.
நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், நேற்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா பற்றி பேசினார்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் சிங்கப்பூரர்களின் உயர்தர வாழ்க்கைச் சூழலை நிலைநாட்டி வரவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் இந்தச் சட்டத்திருத்தம் மேலும் ஒரு மைல்கல் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதனங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் சிங்கப்பூரின் குளிர்சாதன தேவைகளை நாம் பொறுப்புள்ள வகையில் நிறைவேற்றுகிறோம் என்பதை அந்தத் திருத்தச் சட்டத்தின் ஒரு பகுதி உறுதிசெய்யும்.
வேலை நிறுத்த விதியை மீறுவோருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் உகந்த வாழ்க்கைச் சூழலை நிலைநாட்டி வர மசோதாவின் இரண்டாவது பகுதி வகைசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

