கோ-அஹெட் நிறுவனம் நாளை
யிலிருந்து அதன் ஐந்து பேருந்துச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது. கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் பேருந்துச் சேவைகள் விரைவுச்சேவை அல்லது நேரடி நகரச் சேவையாகும்.
இந்தத் தகவலை அந்நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டது.
12e, 43e, 518 ஆகிய விரைவுச்சேவைகளும் 661, 666 ஆகிய நகர நேரடிச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன.
கோ-அஹெட் நிறுவனத்தின் பேருந்து எண் 12, 43 ஆகிய பிரதான பேருந்துச் சேவைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூக அளவிலான கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை எதிர்கொள்ளும் வகையில் சில பேருந்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
குறைந்த அளவிலான பயணிகள் பயன்படுத்தும் பேருந்துச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, அவற்றின் ஓட்டுநர்களை அதிக பயணிகள் பயன்படுத்தும் பேருந்துச் சேவைகளுக்குப் பயன்படுத்த ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக கோ-அஹெட் பேருந்து நிறுவனம் கூறியது.
வேறு பேருந்துச் சேவைகள் அல்லது எம்ஆர்டி ரயிலைப் பயன்
படுத்தி தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்குப் பயணம் செய்ய, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் பேருந்துச் சேவைகளை வழக்க
மாகப் பயன்படுத்துவோரிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
"நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து, சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும்," என்று ஆணையம் தெரிவித்தது.
ஊழியர் பற்றாக்குறையால் தனது பேருந்துச் சேவைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று மற்றொரு பேருந்துச் சேவை நிறுவனமான டவர் டிரான்சிட் தெரிவித்துள்ளது.

