சமூக உணர்வைத் தரும் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகள்
மளிகைப் பொருட்கள், உணவு வகைகள் போன்ற அத்தியாவசியமானவற்றை வாங்குவதற்காக மட்டும் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகள் இல்லை. தங்களின் வேலையிடங்களும் தங்குமிடங்களும் தராத சுதந்திரத்தையும் கட்டுப்பாடுகளின்றி பிறரைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் அவை தருகின்றன என்று வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் தங்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த இன்பமான தருணங்களை மீண்டும் அனுபவிக்க இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கையை சில வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டுள்ளனர்.
இனி வாரந்தோறும் 500 வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியாவிற்குச் செல்லலாம். அதற்கு வகைசெய்யும் புதிய திட்டம் இந்த வாரம் தொடங்கியுள்ளது.
விரைவு பரிசோதனை நிலையங்களில் கூட்டம்
வேகமாக முடியவேண்டிய கொவிட்-19 பரிசோதனைக்காக காத்திருக்கவேண்டிய நேரம் சிலருக்கு இரண்டு மணிநேரமாக ஆனது. இதற்குக் காரணம், துரிதமாக பரிசோதனை மேற்கொள்ளும் நிலையங்களில் திரண்ட கூட்டம்.
முடுக்கிவிடப்பட்ட கொவிட்-19 பரிசோதனை விதிமுறைகள் நடப்பிற்கு வந்ததையொட்டி சில நிலையங்களில் அதிகமானோர் நீண்ட வரிசையில் திரண்டனர்.
அண்மையில் அதிகரித்துள்ள கொவிட்-19 சம்பவங்களைத் தொடர்ந்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனை விதிமுறைகள் முடுக்கிவிடப்பட்டன. அவை நேற்று முன்தினம் நடப்புக்கு வந்தன.
607 கொவிட்-19 சம்பவங்கள்
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 607 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 534 பேருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் 63 பேருக்குத் தொற்று ஏற்பட்டது, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தோரிடையே 10 கொவிட்-19 சம்பவங்கள் இடம்பெற்றன.
மேலும், புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் உள்ள ரென் சி தாதிமை இல்லம் புதிய கொவிட்-19 கிருமிப் பரவல் குழுமமாக உருவெடுத்துள்ளது. இந்தக் குழுமத்தில் 28 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
அவர்களில் 20 பேர் இல்லத்தில் வசிப்பவர்கள், எட்டு பேர் அங்கு வேலை செய்பவர்கள். இல்லத்தில் வசிக்கும் மற்றவர்கள், இதர ஊழியர்கள் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை. கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அது தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. பேருந்து நிலையங்கள் குழுமத்தில் மொத்தம் 702 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தக் குழுமத்தில் புதிதாக 25 பேருக்குத் தொற்று ஏற்பட்டது.

