காரில் பிரசவம்; கைகொடுத்த சைக்கிளோட்டிகள்

திரு முகம்மது அன்னூர் முகம்மதுவின் மனைவி மர்தியா அப்துல் மாலிக்கிற்கு கடந்த 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டபோது, அவர்கள் பதற்றமடையவில்லை.

திருவாட்டி மர்தியாவிற்கு இது மூன்றாவது பிரசவம். முந்திய பிரசவங்களின்போது, வலியெடுக்கத் தொடங்கி 24 மணி நேரத்திற்குப் பிறகே குழந்தை பிறந்தது.

ஆனால், திருவாட்டி மர்தியாவின் பனிக்குடம் உடைந்ததாலும் வலி கூடியதாலும், முந்திய பிரசவங்களைப் போன்றதல்ல இது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

உடனே பயணப் பகிர்வு செயலியான ‘தடா’ மூலம் அவர்கள் தனியார் வாடகை காரை அழைத்தனர். ஆயினும், காரில் ஏறிய பத்து நிமிடங்களில் குழந்தையின் தலை வெளியே தெரிந்தது.

31 வயதான அத்தம்பதியர்க்கு ஏற்கெனவே நான்கு வயதில் மகளும் ஒரு வயதில் மகளும் உள்ளனர்.

பனிக்குடம் உடைந்ததும் தாங்கள் பதற்றமடைந்துவிட்டோம் என்றும் எதையும் எடுத்து வைக்கக்கூட நேரமில்லை என்றும் தொலைபேசி வழியாக திரு முகம்மது சொன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

அதிகாலை 5.50 மணிக்கு வாடகை கார் வந்தது. திரு ஏடி சூன் என்பவர் அதை ஓட்டி வந்தார்.

அவசர மருத்துவ வாகனத்தை அழைக்கும்படி தாம் அறிவுறுத்தியபோதும், மருத்துவமனை செல்லும்வரை தம் மனைவி தாங்கிக்கொள்வார் என்று திரு முகம்மது உறுதியளித்ததாக திரு சூன் சொன்னார்.

அதனையடுத்து, அவர்களை ஏற்றிக்கொண்டு காரைச் செலுத்தினார் திரு சூன்.

ஆனால், வெகுவிரைவில் நிலைமை கைமீறிப்போனது.

கார் நிறுத்தும் இடத்தில் இருந்து அந்த கார் கிளம்பியதும், திருவாட்டி மர்தியா வலி பொறுக்க முடியாமல், இருக்கையைப் பற்றியபடி அலறத் தொடங்கினார். காரை விரைவாகச் செலுத்தும்படி அவரின் கணவர் திரு சூனிடம் கூறியபடி இருந்தார்.

“பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கீழே ஏதோ தெரிவதுபோல் இருந்தது. முதலில் அது என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. உருண்டையாக இருப்பதைக் கண்டதும் அது குழந்தையின் தலை என்பதை உணர்ந்தேன். பிறகு, என் கைகள் இரண்டிலும் ரத்தமாக இருந்ததைக் கண்டேன்,” என்று விவரித்தார் திரு முகம்மது.

அதனையடுத்து, அப்பர் தாம்சன் சாலையில், ஸ்பிரிங்லீஃப் எம்ஆர்டி நிலையம் அருகே காரை நிறுத்திய திரு சூன், அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தார்.

அப்போது, சைக்கிளோட்டிகள் குழு ஒன்று சாலையின் நடுவே சென்றதைக் கண்ட திரு சூன், தமது கைபேசி விளக்கை ஒளிரவிட்டு, அவர்களை நோக்கி அதை அசைத்துக்காட்டி, மருத்துவ உதவிகோரி சத்தமிட்டார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட சைக்கிளோட்டக் குழு அங்கு நின்றது. நல்வாய்ப்பாக, அவர்களில் மருத்துவர் ஒருவரும் இருந்தார். நிலைமையை அறிந்த அவர் உடனே செயலில் இறங்கினார்.

காரின் பின்னிருக்கைக்குச் சென்ற அவர், திருவாட்டி மர்தியா ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்க உதவினார். காலை 6.20 மணியளவில் பிறந்த அப்பிஞ்சு 2.5 கிலோ எடையுடன் இருந்தது.

அதன்பின் ஐந்து நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த அவசர மருத்துவ வாகனம், குழந்தையையும் அத்தம்பதியரையும் ஏற்றிக்கொண்டு கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு விரைந்தது.

‘தடா’ நிறுவனத்தின் பொது மேலாளர் ஜோனத்தன் சுவா, முகம்மது-மர்தியா தம்பதியர்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு மாத காலத்திற்குக் கட்டணமின்றி அவர்கள் தங்களது வாடகை கார் சேவையைப் பயன்படுத்தலாம் என்றும் $300 மதிப்பிலான மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகளையும் வழங்கப்படும் என்றும் திரு சுவா கூறினார்.

அத்துடன், திரு சூனின் காரைக் கழுவுவதற்கு ஆகும் செலவை நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்ற திரு சுவா, அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பும் ஈடுசெய்யப்படும் என்றார்.

திரு சூனுக்கும் தக்க நேரத்தில் கைகொடுத்த சைக்கிளோட்டிகளுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளதாகச் சொன்னார் திரு முகம்மது.

“திரு சூனுக்கும் அந்த மருத்துவர்க்கும் நானும் என் மனைவியும் மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களே எங்களின் கதாநாயகர்கள்.

“திரைப்படங்களில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறும் என்று நினைத்தேன். இப்படியொரு நிகழ்வை என் வாழ்க்கையிலும் எதிர்கொள்வேன் என்று ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!