கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுவோர், அதற்குப் பலியாவோர் ஆகியோரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கக்கூடிய 'ப்ரிடிக்டிவ் கம்ப்யூட்டர் மாடலிங்' எனப்படும் முன்னுரைப்பு கணினி முறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொவிட்-19 சம்பவங்களையும் மரணங்களையும் குறைக்க உதவும் உத்திகளை இதனால் வழங்கமுடியும்.
முன்னுரைப்பு முறை வழங்கும் உத்திகளைப் பயன்படுத்தியிருந்தால் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களையும் அதற்குப் பலியாவோரின் எண்ணிக்கையையும் 59லிருந்து 89 விழுக்காடு வரை குறைத்திருக்கலாம்; நாடுகளின் கொவிட்-19 புள்ளி விவரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.
நான்கு பெரிய ஆசிய நாடுகளின் புள்ளி விவரங்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் சென்ற ஆண்டு முழுவதும் பதிவான கொவிட்-19 தொடர்பிலான புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்பட்டன.
முன்னுரைப்பு முறைக்குள் தகவல்களை அனுப்பினால் சில நிமிடங்களில் அது பதில்களைத் தந்துவிடும். குறைந்தது மூன்று நாட்களுக்கான தகவல்களை முறைக்குள் அனுப்பவேண்டும்.

