உலகில் ஆக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூருக்கு அந்தப் பெருமை சேர்ந்துள்ளது.
மின்னிலக்க வாழ்க்கைத் தரக் குறியீட்டைக் கணிக்கும் ஆய்வில் இந்த விவரம் வெளியிடப்பட்டது. குறியீட்டில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. நிலையான இணையத் தொடர்பு, மின்னிலக்க அரசாங்கச் சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் சிங்கப்பூர் உலகின் ஆகச் சிறந்த நாடுகளில் ஒன்று.
மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 110 நாடுகள் பங்கேற்றன.
ஐக்கிய நாட்டு நிறுவனம், உலக வங்கி, இதர சில அமைப்புகள் ஆகியவை வெளியிடும் புள்ளி விவரங்களைக் கொண்டு 'சர்ஃப்ஷார்க்' நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. மின்னிலக்கக் கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளடக்கிய ஐந்து அம்சங்களைக் கருத்திற்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறியீட்டில் டென்மார்க் முதலிடத்தை வகித்தது. அதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஃபின்லாந்து, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. மின்னிலக்க அரசாங்கச் சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து சிறப்பாக விளங்கி வரும்போதும், இந்த அம்சத்தில் சிங்கப்பூர் முதலிடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இறங்கியது. செயற்கை நுண்ணறிவை உபயோகிப்பது போன்ற அம்சங்களைக் கருத்திற்கொண்டு இது கணக்கிடப்பட்டது.
தான் வழங்கும் இணையத்தளத்தின் தரத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் 13ஆம் இடத்தைப் பிடித்தது. இதன் அடிப்படையில் சிங்கப்பூரின் அகண்ட அலைவரிசை வேகம் ஆகச் சிறப்பாக இருப்பது தெரியவந்தது.

