கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து உலகம் விரைவில் வெளி வராத நிலையில், சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிப் போக வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தகைய வாய்ப்புகளை பெற ஏதுவாக நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் வர்த்தகங்கள் நீடித்த நிலைத்தன்மைக்கு எதிர்காலத்திற்கு தயார்நிலையில் உள்ள ஊழியரணியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அத்துடன், நிறுவனங்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு உலகப் பொருளியலுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில் சபையின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கான் மேற்கண்டவாறு சொன்னார்.
இந்த மாநாட்டில் சீனர் வர்த்தக, தொழில்சபை தான் ஆண்டு தோறும் மேற்கொள்ளும் ஆய்வின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டது.
அதில், பெரும்பாலான சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், உயர்ந்து வரும் செலவினம், தகுந்த ஊழியர்கள் கிடைப்பது, கொவிட்-19 கொள்ளை நோய் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், வர்த்தக வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் போன்றவை முக்கிய சவால்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் கான், இந்த நெருக்கடி நிலையிலும், வர்த்தகங்கள் உருமாறவும், வளர்ச்சி காணவும் புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்று விளக்கினார்.
"வர்த்தகத்தை நிலைபெறச் செய்வது என்பது மாரத்தான் போன்ற நீண்ட நெடுந்தொலைவு ஓட்டம்,
"ஆனால், நாம் நமது சிந்தனைப் போக்கை மாற்றி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் கண்டு, மக்களின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து உலகப்பொருளியலுடன் ஈடுபாடுகொள்ளும் முயற்சிகளை முடுக்கிவிட்டால், கொள்ளைநோய்க்கு பிந்திய உலகில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று திரு கான் தமது உரையில் கூறினார்.

