வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதி இல்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் பற்றி நாடாளுமன்றத்தில் தரக்குறைவாகக் கூறிய வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். அது பற்றி டாக்டர் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
நாடாளுமன்றத்தில் தமது சக உறுப்பினரிடம் தனிப்பட்ட முறையில் கூறிய வார்த்தைகளுக்காக திரு லியோங்கைத் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டதாக அமைச்சர் கூறினார். விவாதத்தில் கருத்து வேறுபாடு இருந்தபோதும், தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். திரு லியோங் தமது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.
நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற விவாதத்தின்போது திரு லியோங்கும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் பலமுறை எதிர்க் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது திரு லியோங்கின் பள்ளி பற்றி சிலர் கூறிய வார்த்தைகள் ஒலிப்பெருக்கியில் கேட்டது. அது சமூக ஊடகங்களில் பரவியது.
அமைச்சர் மன்னிப்புக் கேட்டதை உறுதிப்படுத்திய திரு லியோங், சிங்கப்பூருக்காக எல்லாரும் நேரத்தை இன்னும் பயனுள்ள முறையில் செலவிடலாம் என்றார்.

