வேலைகள், வெளிநாட்டுத் திறனாளர் கொள்கை போன்ற விவகாரங்கள் பற்றி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த நீண்ட விவாதத்தில் இனவாதத்துக்கும் இனவெறுப்புக்கும் எதிரான உறுதியான, தெளிவான நிலைப்பாட்டை உறுப்பினர்கள் எடுத்தது மகிழ்ச்சி தந்ததாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
"சிங்கப்பூரர்களின் அச்சத்தையும் கவலைகளையும் பயன்படுத்தி, நம்மைப் பிளவுபடுத்தி, தளர்வடைய வைக்கும் முயற்சிகளை அவர்கள் உறுதிப்பட நிராகரித்துள்னர்," என்று திரு லீ கூறினார்.
நேற்று முன்தினம், 10 மணிநேரத்துக்கு மேல் சென்று நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற விவாதத்தைப் பற்றிய தமது கருத்து களைப் பிரதமர் லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சிங்கப்பூரின் எதிர் காலத்துக்கு நல்ல அறிகுறி என்றார் அவர். அந்த விவாதத்தில் நம் வெளிநாட்டவர் கொள்கையைத் தவிர, நமது சமுதாயப் பண்புகள், நிலையற்ற உலகைச் சமாளித்து முன்னேறுவதற்கான நம்பிக்கை, உறுதி ஆகியவையும் அதில் அடங்கியிருந்ததாக பிரதமர் கூறினார்.
"இங்கு வேலை செய்து வசிக்கும் வெளிநாட்டவர்கள் நமது பொருளியலுக்கும் சமூகத்துக்கும் பங்காற்றுகின்றனர். அவர்கள் நமது உள்நாட்டு சமூகத்தில் பங்கினரே," என்று திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களுக்கான வேலைகள். வெளிநாட்டவர் வேலைக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக நேற்று அதிகாலையில் நாடாளுமன்றம் வாக்களித்தது.
விரைவாக மாறிவமரும் பொருளியலில் வேலைகள், போட்டி ஆகியவற்றைப் பற்றி சிங்கப்பூரர்கள் கவலைகொண்டிருப்பதை ஒப்புக்கொண்ட போதும் சிங்கப்பூர் உலகத்துக்கு திறந்திருப்பது அவசியம் என்று தீர்மானம் முன்வைத்தது. வெளிநாட்டவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவை அது கோரியது.
அதே அம்சங்கள் பற்றி சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் முன்வைத்த மற்றொரு தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றம் வாக்களித்தது.

