இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளியல் ஒப்பந்தம் பற்றிய உலவும் வதந்தி களுக்கு அரசாங்கம் சற்று பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைவருமான திரு பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
வெளிநாட்டவரை வேலைக்கு எடுப்பது, சீக்கா ஒப்பந்தம் போன்ற அம்சங்கள் பற்றி நாடாளுமன்றத் த்தில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தில் பேசியபோது திரு சிங் இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்வதற்கு முன்னரே அது பற்றிய அதிருப்தி மக்களிடம் நீருபூத்தநெருப்பாக இருந்தது என்று அவர் கூறினார்.
தரவுகளை வெளியிடவும் தேசிய அளவில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் அரசாங்கம் மறுத்ததால் மக்களிடையே தவறான புரிதலும் பொய்யான வதந்திகளும் பெருகியதாக திரு சிங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தொடர்பு கலாசாரம் மாறவேண்டும் என்ற அவர் அந்த விவகாரம் பற்றி பொது விவாதத்தைத் தெளிவாக்கக் கூடுதல் தகவல்களை வெளியிடும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் அரை மணி நேரம் பேசிய திரு பிரித்தம் சிங், தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் பற்றியும் பாட்டாளி கட்சிக்கு உள்ள நிலைப்பாடு பற்றி விவரித்தார்.
தடையற்ற வர்த்தக உடன்பாடுகள் சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் வேலைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கின என்பதை மறுக்க முடியாது என்று திரு சிங் கூறினார்.
ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தரப்புகள், சீக்கா உடன்பாட்டைச் சாக்காகப் பயன் படுத்தி, பொருளியல் கவலை களின் போர்வைக்குள் இன வாதத்தை மறைத்து வைத்தததாக திரு சிங் கூறினார். இனவாதம், இனவெறுப்பு ஆகியவற்றை பாட்டாளி கட்சி வெறுப்பதாகவும் கண்டிப்பதாகவும் திரு சிங் கூறினார்.
விவாதத்தில் பேசிய பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு, குடிநுழைவு, ஊழியரணி பற்றிய விவரங்களை அரசாங்கம் மேலும் வெளிப்படையாக அளிக்கவேண்டும் என்றார்.

