'தி ஆன்லைன் சிட்டிசன்' என்ற சமூக-அரசியல் இணையத் தளமும் அதன் பல்வேறு சமூக ஊடகத் தளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இவை இன்று பிற்பகல் மூன்று மணிக்கு மூடப்படவேண்டும். எனினும், தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் விதித்துள்ள உத்தரவுக்கு இணங்கும் விதமாக இவை முன்னதாகவே மூடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருப்பவர்களும் இனி இத்தளத்தைக் காண முடியாது. தி ஆன்லைன் சிட்டிசன் தளத்தின் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் செயலிழக்கப்பட்டதுடன் அதன் இன்ஸ்டகிராம் கணக்கு தனியார் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் யூடியூப் தளத்தல் உள்ள அனைத்து காணொளிகளும் அகற்றப்பட்டுள்ளன.
செயல்பாட்டுக்கான நிதி ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டக்கடமை இருந்தபோதிலும், அவற்றை முழுமையாக வெளியிட அந்தத் தளம் பலமுறை தவறியதை அடுத்து இந்த வாரம் திங்கள் அன்று தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், அந்த இணையத் தளத்தின் உரிமத்தை ரத்து செய்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட 'தி ஆன்லைன் சிட்டிசன்' தவறியுள்ளதாக ஆணையம் எச்சரித்தது. முழு விவரங்களை வெளியிட தொடர்ந்து மறுத்தால் உரிமம் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் ரத்து செய்யப்படும் என்றும் ஒளிபரப்புச் சட்டத்தின்படி இணையத்தளத்தின் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படலாம் ஆணையம் இணையத் தளத்தை எச்சரித்தது. கடந்த 2006ல் தொடங்கப்பட்ட 'தி ஆன்லைன் சிட்டிசன்', சிங்கப்பூரின் நீண்ட காலம் வெளிவந்த சுயேச்சையான இணைய ஊடகத் தளமாகும். இதில், குறைந்தது 2016ஆம் ஆண்டு முதன் அதன் ஆசிரியர் டெரி ஸு ஒருவரால் மட்டுமே இயக்கப்படுவதாக அறியப்படுகிறது. இவ்வாண்டு செம்டம்பர் 1ஆம் தேதி பிரதமர் லீ சியன் லூங்கை அவதூறு செய்த வழக்கில் அவருக்கு $210,000 இழப்பீடு வழங்க வேண்டும் உயர்நீதி மன்றம் ஸுவுக்கு உத்தரவிட்டது. பிரதமருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காக திரு ஸு நிதி திரட்டுவதாகவும் புதன்கிழமை இரவு வரையில் அவர் $195,000 திரட்டி விட்டதாகவும் அவரது வழக்கறிஞர் லிம் தியென் கூறியுள்ளார்.

