கடினமான உடற்பயிற்சி செய்வது குறித்து நிபுணர்கள் கருத்து

2 mins read
899f6807-11b6-49fa-a318-ebe70fddf8d9
-

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், குறிப்பாக இளையர்கள், ஒரு வாரத்திற்குப் பதில் இரண்டு வாரங்கள் காத்திருந்த பிறகு எடை தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர்க் குழு அறிவுறுத்தியுள்ளது. அதோடு தங்களின் முதல் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு, மிதமான ஒவ்வாமை பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், அதே தடுப்பூசியை இரண்டாவது மற்றும் அடுத்த முறை போட்டுக்கொள்ள இனி தகுதிபெறலாம் என்றும் அதன் புதிய அறிவுறுத்தல் குறிப்பில் குழு தெரிவித்திருந்தது. தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை மறுஆய்வு செய்ததை அடுத்து நிபுணர்க் குழு இப்பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மாரடைப்பு, இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வின் அழற்சி போன்றவை ஏற்படும் சிறு அபாயம், தடுப்பூசிக்குப் பிறகு உண்டு என்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தரவுகள் தொடர்ந்து காட்டி வருகின்றன. அதிலும், இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இளையர்கள் பெரும்பான்மையாக உள்ளதாக நிபுணர்க் குழு தெரிவித்தது.

பெண்களைக் காட்டிலும் ஆண்களிடத்தில் இந்த இரு அழற்சி அறிகுறிகளும் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு வாரத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டதாக சம்பவங்கள் பதிவாகின. ஆனால் இரண்டாவது வாரத்திலும் இது நடப்பதாக சுகாதார அறிவியல் ஆணையத்திற்குப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளதாக குழு கூறியது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு இரண்டு வாரம் காத்திருந்து கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறப்பு என்று தற்போது அறிவுறுத்தப்படுகிறது.

முதல் 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசியைப் போட்ட பிறகு, மிதமான தோல் பாதிப்புகள் ஏற்பட்டு அடுத்த தடுப்பூசிக்குத் தகுதி பெறாதோர், இனி தங்களின் அடுத்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும். கொவிட்-19 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக அளவில் கிடைத்துள்ள கூடுதல் ஆதாரங்களைக் கொண்டு இது சாத்தியம் என்று நிபுணர்க் குழு தெரிவித்துள்ளது.