தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குழந்தையைப் பெற்றெடுத்தார்
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாத ஒரு கர்ப்பிணிக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைப் பிரிவில் இருந்தபோது அவருக்குக் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 36 வயது திருவாட்டி வெனேசா ரிக்கார்ட், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பிறருக்கு அறிவுறுத்தி உள்ளார். கர்ப்பிணிகள் இவ்வாண்டு ஜூன் 4 முதல் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டபோது, இன்னும் சில மாதம் காத்திருக்கலாம் என்று திருவாட்டி ரிக்கார்ட் நினைத்தார். ஆனால், கிட்டத்தட்ட நிறைமாதமாக இருந்தபோது அவருக்கு கொவிட்-19 உறுதியானது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தனிமைப் படுக்கைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், ஒரு வாரம் கழித்துக் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு கொவிட்-19 ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிறந்து இரண்டரை வாரங்களுக்குப் பிரிந்தே இருந்தார் அந்தத் தாய். நல்ல வேளையாக, குழந்தைக்குக் கிருமி பாதிப்பு ஏதுமில்லை.
இணையத் தாக்குதல்: தற்காப்பை வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தம்
முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது இணையத் தாக்குதல்களின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில், தன் தற்காப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக தற்காப்பு அமைச்சு புதிய பங்காளித்துவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது. அமைச்சு அதன் நிபுணர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கவும் ஊடுருவிகள் பயன்படுத்தும் உத்திகளை ஆராயவும் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக் கழகத்துடன் (எஸ்யுடிடி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து உள்ளது. நாடுகள் அண்மையில் எதிர்நோக்கும் அதிநவீன இணையத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
செயல்பாட்டுத் தொழில்நுட்ப இணைய மிரட்டல்கள் நேர்ந்தால் அவற்றுக்கு எதிரான இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்தையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் கடப்பாடு கொண்டுள்ளதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உணர்த்துவதாகக் கூறப்பட்டது.

