நாளை சனிக்கிழமை அன்று, 343 ஜோடிகள், தங்கள் பதிவுத் திருமணத்தை நடத்தவுள்ளனர் என்று திருமணப் பதிவகம் கூறியுள்ளது. சிவில் திருமணங்கள், முஸ்லிம் திருமணங்கள் இரண்டும் இதில் அடங்கும்.
இவ்வாண்டு இதுவரை, ஆக அதிகமான திருமணப் பதிவுகள் இந்த தேதியில்தான் நடைபெறவுள்ளன. வழக்கமாக சனிக்கிழமைகளில் சராசரியாக 150 பதிவுத் திருமணங்கள் நடைபெறும். நாளை 18ஆம் தேதி இரட்டிப்பாக அதிகமான திருமணங்கள் நடைபெறவுள்ளன.
"செப்டம்பர் 18ஆம் தேதியில் சீன வாஸ்துப்படி 'வான் மகிழ்ச்சி' எனும் சுப நட்சத்திரம் உள்ளது. மகிழ்ச்சியைக் குறிக்கும் இந்நாள் திருமணங் களுக்கு உகந்த நாள்.
"அது வெற்றியைக் கொடுக்கும் நாள் என்றும் கருதப்படுகிறது. அந்நாளில் செய்பவை கைகூடும் என்று பொருள்," என்று சீன வாஸ்து நிபுணரான எடலினா பாங் விவரித்தார்.
அக்டோபர் 10ஆம் தேதியும் பல திருமணங்கள் நடைபெற உள்ளதாக திருமணப் பதிவகப் பேச்சாளர் கூறினார்.
அக்டோபர் 10ஆம் தேதியன்று தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய தற்போது 298 சூஜாடிகள் விண்ணப்பித்துள்ளதாக திரு மணப் பதிவகத்தார் கூறினார்.
எனினும் திருமண நாளுக்கு 21 நாட்கள் முன்னர் வரையில் அது குறித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதால் இன்னும் பலர் அன்று திருமணம் புரியலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், 10-10 போன்ற இரட்டை தேதிகள் நினைவுவைத்துக்கொள்ள எளிதானவை என்பதால் அவை பிரபலமாக இருப்பதாக திருமணத் திட்டமிடுதல் நிபுணர் ஒலிவியா டான் குறிப்பிட்டார்.
மாண்டரின் மொழியில் அக்டோபர் 10, முழு நிறைவைக் குறிக்கும் நாள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் கொவிட்-19 பரவலால் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தத் திட்டமிடுவதாக பலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.

