முன்னாள் புக்கிட் தீமா தீயணைப்புக் கட்டடம், சமூக முனையமாக மாற்றப்பட்டு, 2022ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் திறக்கப்படும். அதில் உணவு வீதி, தோட்டக் கலை இடங்கள் போன்றவை இருக்கும். புதிய சமூக முனையத்தில் நகர்ப்புற வேளாண்மை, நல்வாழ்வு, இயற்கை சார்ந்த நடவடிக்கைகள் இடம்பெறும்.
கல்வி நோக்கம் கொண்ட குறுந்தோட்டங்களும் அங்கேயே விளைந்த உணவை சமைத்துத் தரும் உணவகமும் அங்கிருக்கும்.
பழைய வளாகத்தின் பசுமைச் சூழலைப் பயன்படுத்தி, இயற்கை நடைகள், வேளாண் வகுப்புகள், வெளிப்புற விளையாட்டுகள், யோகா வகுப்புகள், அனுபவரீதியான நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்படும்.
ஓல்ட் ஜூரோங் ரோடும் அப்பர் புக்கிட் தீமா ரோடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள வளாகத் தின் பரப்பளவு 0.83 ஹெக்டராகும்.
புக்கிட் தீமா தீயணைப்பு நிலையம் 2005ஆம் ஆண்டு மூடப்பட்ட பின்னர் குத்தகைக்கு விடப்பட்டது.
வரும் 2025ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள ஹியூம் எம்ஆர்டி ரயில் நிலையத்துக்கு சுமார் 600 மீட்டர் தொலைவில் முனையம் இருக்கும்.அத்துடன் சமூக முனையம், அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள மரபுடைமை, இயற்கைத் தளங்களுக்கு அருகில் உள்ளது.
முனையத்தைக் கட்டும் குத்தகையை, 'ஹோம்ஸ்டேட் ஹாலந்து' எனும் நிறுவனம் பெற்றுள்ளது. நிலைத்தன்மையுள்ள பயன்பாட்டுக்கு கட்டடங்களை மாற்றும் உலகளாவியப் போட்டியின் கீழ் குத்தகை வழங்கப்பட்டது.

