பருவநிலை மாற்றம் சிங்கப்பூரின் கடற்பகுதியில் உள்ள கடல் சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய அரசாங்கம் ஆய்வுகளை நடத்தவுள்ளது.
புதிய கடல்வாழ் பருவநிலை மாற்ற அறிவியல் திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் மாதத்தில் புதிய ஆய்வுத் திட்டங்களுக்காக அது அழைப்பு விடுக்கும்
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நேற்று நடந்த கடல்வாழ் அறிவியல் கருத்தரங்கில் இதைத் தெரிவித்தார்.
"கடல் மட்ட உயர்வு, கடற்பரப்பு தட்பவெப்ப நிலையின் அதிகரிப்பு, மோசமான புயல்கள் போன்றவற்றால் நமது கடல் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் அவற்றைத் தாக்குப்பிடிக்கக் கூடிய வகையில் சமாளிக்கும் வழிகள் பற்றியும் நாம் ஆராயவுள்ளோம். கடல் மட்ட உயர்விலிருந்து நமது கடற்கரைகளைத் தடுக்க இயற்கை சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவது அதில் அடங்கும்," என்று அமைச்சர் கூறினார்.
$25 மில்லியன் மதிப்புள்ள கடல் வாழ் பருவநிலை மாற்ற அறிவியல் திட்டத்துக்கு தேசிய பூங்கா கழகம் தலைமை தாங்குகிறது. மேலும் பல அரசாங்க அமைப்புகளும் ஆய்வு அமைப்புகளும் அதில் பங்கேற்கின்றன.

