இந்து இளங்கோவன்
35 வயது பொறியாளர் பார்த்திபன் முனுசாமி கடந்த 10 ஆண்டு களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் மலேசியர். எல்லை மூடப்படும் முன்பு தவறாமல் ஒவ்வொரும் வார இறுதியிலும் ஜோகூர் பாருவில் வசிக்கும் தமது பெற்றோரைப் பார்க்கச் சென்றுவிடுவார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்திருப்பது மிகுந்த கவலையைத் தருவதாக திரு பார்த்திபன் கூறினார்.
அதிலும் தமது அக்காள் மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாதது பெரிய ஏமாற்றம் தந்ததாக அவர் சொன்னார்.
கிருமித்தொற்று காரணமாக சென்ற ஆண்டு சிங்கப்பூர் மலேசிய எல்லைகள் மூடப்பட்டன. இதனால் பார்த்திபனை போன்ற சிங்கப்பூரில் வசிக்கும் பல நூறாயிரம் மலேசி யர்கள் தாய்நாடு திரும்ப முடியாது உள்ளனர்.
இவர்களின் வாட்டத்தைப் போக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் 'காஸ்வே எக்ஸ்சேஞ்ச்' விழா பிரபல நகைச்சுவை நடிகர்களை கொண்ட இலவச நிகழ்ச்சியை படைக்கவுள்ளது.
நாளை 18ஆம் தேதி இணையம் வழி நடக்கவிருக்கும் 'லெட்ஸ் லாஃப் மலேசியா' என்ற இந்நிகழ்ச்சியில் பிரபல மலேசிய நகைச்சுவை கலைஞர்கள் கஜன், பிரகாஷ் டேனியல் உள்ளிட்டவர்கள் பங்கேற்கஉள்ளனர்.
'காஸ்வே எக்ஸ்சேஞ்ச்' சிங்கப்பூர், மலேசியா இடையே கலை, கலாசாரப் பரிமாற்றத்திற்கான வருடாந்திர விழாவை நடத்த கடந்த 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
"கவலைகளை மறக்க சிரிப்புதான் சிறந்த வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன். நானும் குடும்பத்தை பிரிந்து சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு மலேசியர்தான். உறவுகளை விட்டு சிங்கப்பூர் வந்து உழைக்கும் மலேசியர்களை ஒன்றிணைத்துக் கொண்டாட ஒரு தளமாக இந்நிகழ்ச்சி அமையும்." என்றார் 'லெட்ஸ் லாஃப் மலேசியா' நிகழ்ச்சியின் இயக்குனர் திரு ஷான் லூர்துசாமி.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காண இங்கு பதிவு செய்யலாம்: https://llm2021.peatix.com

