சிறுமியை உதைத்து, பல்லை உடைத்ததை ஒப்புக்கொண்ட தாய்
இரண்டு பெண்பிள்ளைகளைக் கண்டிக்கும் சாக்கில் அவர்களை அறைந்து, உதைத்ததுடன், மூத்த மகளின் பல்லை உடைத்த 38 வயது இல்லத்தரசி தமது குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார்.
37 வயது தந்தை வீடு திரும்பியதும், பத்து வயது மகளின் பல் உடைந்திருந்ததைப் பார்த்து கேகே மாதர் சிறார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு அந்த மாது மீது போலிஸ் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தாம் பிள்ளைகளை அடிக்கவில்லை என்று போலிசாரிடம் கூறிய மாது, சிறுவர் பாதுகாப்பு அதிகாரியிடம் பொய் சொல்லும்படி பத்து வயது மகளிடம் கூறினார்.
மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று காணொளி வழி தோன்றிய மாது, மகள்களை துன்புறுத்தியதன் தொடர்பில் ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தண்டனை விதிப்பின்போது மேலும் இத்தகைய நான்கு குற்றச்சாட்டு கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அவரது இளைய மகளுக்கு ஆறு வயது. அவருக்கு மகனும் உண்டு. பிள்ளைகளைப் பாதுகாக்க, அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
கோழி விலை உயரக்கூடும்
மலேசியாவில் கோழி விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் சிங்கப்பூரிலும் வரும் வாரங்களில் கோழி விலை உயரக்கூடும் என்று இங்குள்ள விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாவில் உயிருள்ள கோழியின் விலை கடந்த சில வாரங்களில் உயர்ந்து, தற்போது கிலோ ஏழு முதல் எட்டு ரிங்கிட்டாக (S$2.25 - S$2.60) உள்ளது. அதனால் இங்கு புதிய கோழிகளின் விலை சுமார் 10% அதிகமாகும் என்று விற்பனையாளர்கள் நேற்று முன்தினம் கூறினர்.
கோழித் தீவனமாக வைக்கப்படும் சோளம், சோயா பருப்பு போன்றவற்றின் விலையால் மலேசியாவில் கோழிப் பண்ணைகள் அவற்றின் விலையை ஏற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.
கோழி விற்பனையாளர்கள், சிக்கன் ரைஸ் போன்ற கோழி உணவு வகைகளை விற்கும் சிலர், கோழி விலை அதிகரிக்கலாம் என்று விநியோகிப்பாளர்கள் கூறியுள்ளதாகத் தெரிவித்தனர். தாங்களும் விலையை ஏற்றலாமா இல்லையா என்று பரிசீலித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
உள்ளூர் நூலுக்கு திருப்பூர் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விருது
தமிழ்நாட்டின் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், ஆண்டுதோறும் வழங்கும் அயலக நூல்களுக்கான விருதை இவ்வாண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய "சிங்கப்பூரில் சரவணன்" நூல் பெற்றுள்ளது.
அச்சங்கம் ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக அளவில் தமிழில் வெளியான சிறந்த நூல்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. சிங்கப்பூரில் சரணவன் நூலுக்கு கடந்த ஆண்டு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவொளி விருதை வழங்கியது. மேலும், 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா குறுநாவல் போட்டியில் இக்கதை பரிசு பெற்றது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கொடையாளரான லீ அறநிறுவனம்
சிங்கப்பூரின் ஆகப் பெரிய கொடையாளர் லீ அறநிறுவ னம் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த நிதி ஆண்டில் லீ அறநிறுவனம் $52.8 மில்லியன் வெள்ளியைச் செலவு செய்தது. அதில் $52 மில்லியன் மானியங்களாகவும் நன்கொடைகளாகவும் வழங்கப்பட்டன.
'சொரிஸ்டிக் இம்பேக்ட் கலெக்ட்டிவ்' எனும் ஆலோசனை நிறுவனம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பத்து கொடையாளர்களைப் பட்டியலிட்டது.
தெமாசெக் நிறுவனம் அமைத்துள்ள ஆறு அறநிறுவனங்களில் ஒன்றான 'தெமாசெக் ஃபவுண்டேஷன் இன்னோவேட்ஸ்' அதில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் மூன்றாவதாக இடம்பெற்றது. லியன் அறநிறுவனம், ஷா அறநிறுவனம் போன்றவையும் பட்டியலில் இடம்பெற்றன. இங்குள்ள பத்து பெரிய கொடையாளர்களும் கடந்த நிதி ஆண்டில் மொத்தம் $189 மில்லியனை நன்கொடையாக வழங்கின என்றது அறிக்கை.

