ஜூ கூன் எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகே 60 பெனோய் சாலையில் அமைந்துள்ளது புதிய வேளாண் தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளி.
வேளாண் தொழில்நுட்பத் துறையில் ஆற்றல் உள்ளவர்களை ஊக்குவித்து அவர்களின் திறன்களை மேம்படுத்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் 'லெர்னிங்ஹப்' தொடர்கல்வி, பயிற்சிப் பிரிவின் தேசிய அளவிலான முயற்சியில் இப்பள்ளி அடங்கும்.
2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்கும் சிங்கப்பூரின் இலக்கை எட்டுவது இந்த முயற்சியின் நோக்கம்.
சிங்கப்பூரின் வேளாண் சார்ந்த இலக்குகளை அடைவதில் பயிற்சி வழங்குவது ஒரு முக்கிய அம்சம் என்று 'லெர்னிங்ஹப்' தலைவர் யூஜீன் வோங் கூறினார்.
சிங்கப்பூர் சொந்தமாக உணவைத் தயாரிப்பது முக்கியம் என்று ஆய்வு ஒன்றில் பங்கேற்றோரில் 97 விழுக்காட்டினர் கருதுகின்றனர். சுமார் 300 பேர் ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களில் சிலர் இந்தத் துறையில் இல்லாதவர்கள். அவர்களில் 90 விழுக்காட்டினர், தொழில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வேளாண் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறினர்.
புதிய பள்ளியில் பாடத் திட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். பயிர்களை வளர்ப்பதில் அடிப்படைத் திறன்கள், வேளாண் தொழில்நுட்பம், வேளாண் செயல்முறைகள், தானியக்கமும் வர்த்தகமும் என்று நான்கு அங்கங்களாக பாடத் திட்டம் பிரிக்கப்படும்.
வேளாண் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களைச் சேர்க்கும் உத்திகளும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். முன்பு சிங்கப்பூரில் போதுமான நிலம் இல்லை, அத்துடன் நாடு எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்து வந்தது, அதனால் வேளாண் துறைக்குள் நுழைவது சிரமமாக இருந்தது என்றார் பள்ளியின் மாணவர்களில் ஒருவரான திரு ஷாஜிஹான்.
"இப்போது இந்தத் துறைக்கு அதிக ஆதரவு இருப்பதோடு வேளாண் துறைக்கென இடமும் இருக்கிறது, வர்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது வெற்றிஅடையும் என்று நான் நம்புகிறேன்," எனத் திரு ஷாஜிஹான் சொன்னார்.
தொடக்க நிகழ்ச்சியில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தேசிய அளவில் உள்ள தேவையைப் பூர்த்திசெய்யவும் தொழிலதிபர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கவும் வளர்ந்துவரும் இந்தத் துறை கைகொடுக்கும் என்று நம்புவதாகத் திரு இங் கூறினார்.

