ஐந்து வங்கிகளை ஏமாற்றியவருக்கு ஈராண்டு, இரண்டு மாதச் சிறை
இடம்பெறாத பரிவர்த்தனைகளுக்காக ஐந்து வங்கிகளை ஏமாற்றி 10 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை வழங்க வைத்த நபருக்கு ஈராண்டு, இரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 61 வயது சோ சியாவ் தியோங், தன் மீது சுமத்தப்பட்டிருந்த 25 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தீர்ப்பு வழங்கும்போது மேலும் 50 குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
சோ, முன்பு நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருந்தார், அந்நிறுவனம் இப்போது கலைக்கப்பட்டுள்ளது. 2007, 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் வங்கிகளை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறார்.
சாங் ஹுவா வர்த்தக வங்கி, யுஓபி, ஒசிபிசி, மேபேங்க், ஏபிஎன் எம்ரோ ஆகியவை அவர் ஏமாற்றிய வங்கிகள். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வர்த்தகச் செலவுகளுக்காக சோ இவற்றிடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்.
பணத்தை திரும்பத் தர
யேல்-என்யுஎஸ் ஏற்பாடு
இன்றைக்குள் விண்ணப்பங்களை மீட்டுக்கொள்ளும் தனது முதலாம் ஆண்டு மாணவர்களின் பணம் திரும்பக் கொடுக்கப்படும் என்று யேல்-என்யுஎஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்வியாண்டின் முதல் காலாண்டுக்கான கட்டணம் கழித்துக்கொள்ளப்படும், பயன்பாட்டைப் பொறுத்து தங்குமிட வசதிகளுக்கான தொகை திரும்பத் தரப்படும் எனப் பல்கலைக்கழத்தின் கல்வி விவகாரங்கள் பிரிவின் துணைத் தலைவரான பேராசிரியர் ஜொவேன் ராபர்ட்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
ஒரு கல்வியாண்டுக்கான கட்டணம் சுமார் 30,000 வெள்ளிக்கும் 75,000 வெள்ளிக்கும் இடைப்பட்டிருக்கும். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உட்பட இங்குள்ள இதர தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் இளங்கலை பாடத் திட்டங்களுக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கு உதவும் முயற்சியையும் யேல் மேற்கொள்ளும்.
அவ்வாறு செய்ய எண்ணும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களுடன் சொந்தமாக இதர பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் எனப் பேராசிரியர் ராபர்ட்ஸ் கூறினார்.
$15,000 கையாடிய முன்னாள்
வழக்கறிஞருக்குச் சிறை
தன்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட 15,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கையாடிய முன்னாள் வழக்கறிஞருக்கு ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது 53 வயதாகும் ஜி. பி. வாசுதேவன், 2016ஆம் ஆண்டில் குற்றங்களைப் புரிந்தார். அப்போது அவர் அத்வைத்தா சட்ட நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
10,700 வெள்ளித் தொகை தொடர்பிலான இரண்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை வாசுதேவன் ஒப்புக்கொண்டார். போலியாக கையெழுத்திடுவது அல்லது போலி ஆவணங்களைத் தயாரிப்பதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது கையாடப்பட்ட எஞ்சிய தொகையின் தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொள்ளப்பட்டன.
ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

