மூவரைப் பலிவாங்கிய துவாஸில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் நேர்ந்த வெடிப்பு குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பொது விசாரணை நடத்தப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த வெடிப்புக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணங்கள், சூழ்நிலைகள் ஆகியவை முதற்கட்ட விசாரணையில் ஆராயப்படும் என்று மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறும்.
விபத்து குறித்து தான் விசாரணை மேற்கொண்டதாகவும் அதில் கண்டுபிடித்த தகவல்களைத் தெரிவிக்கப்போவதாகவும் மனிதவள அமைச்சு கூறியது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்றது, ஆதாரம் திரட்டியது, முக்கிய சாட்சிகளை அடையாளம் கண்டு அவர்களை பேட்டி கண்டது, தடயவியல் சோதனைகளை நடத்தச் சொன்னது உள்ளிட்ட நடவடிக்கைகள் தான் மேற்கொண்ட விசாரணையில் இடம்பெற்றதாக அமைச்சு குறிப்பிட்டது. சம்பவத்தைப் பார்த்தவர்கள், நிபுணர்கள் ஆகியோர் சாட்சியளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களும் நீதிமன்ற விசாரணைக்கு நேரடியாகச் செல்லலாம். அரசு நீதிமன்றங்களின் 8ஏ நீதிமன்றத்தில் விசாரணை காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரையிலும், 27ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரையிலும், அடுத்த மாதம் நான்காம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரையிலும் நீதிமன்ற விசாரணை நடைபெறும்.
எனினும், கிருமிப் பரவல் சூழல் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் இருக்கக்கூடாது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று நிகழ்ந்த வெடிப்பில் 10 ஊழியர்கள் காயமுற்றனர். காயமுற்ற மூவர் பின்னர் மரணமடைந்தனர். காயமுற்றோரில் கடைசியாக குணமடைந்தவர் கடந்த ஜூன் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து இருப்டம் திரும்பினர்.
இரண்டாம் கட்ட நீதிமன்ற விசாரணை வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெறும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

