போலி பாஸ்போர்ட்: சிங்கப்பூரருக்கு சிறை
சீனாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 50 வயது சிங்கப்பூரரான லியோங் சவுன் கியோங் பாஸ்போர்டை தொலைத்துவிட்டார். புதிய பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்ய தம் நண்பனின் உதவியை நாடி பணம் கொடுத்தார்.
'லெங் கிறிஸ்தஃபர்' என்ற பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட்டை லியோங் பெற்றார். அதில் லியோங் மலேசியாவில் பிறந்த யுகாண்ட குடிமகன் என்று பதிவிடப்பட்டிருந்தது. சீன அதிகாரிகளின் தண்டனைக்கு அஞ்சி அவ்வாறு செய்ததாக லியோங் கூறினார்.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி லியோங் அந்த போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் வந்தார். குடியுரிமைச் சேவைகள் தொடர்பாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தை லியோங் அணுகியபோது அவர் பிடிபட்டார்.
செப்டம்பர் 16ஆம் தேதி லியோங் குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். லியோங்கிற்கு நான்கு மாதச் சிறை தண்டனையும் $9,000 அபராதமும் விதிக்கப் பட்டது. அபராதத் தொகையைக் கட்ட இயலாவிட்டால் கூடுதலாக 36 நாட்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும்.
கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறை மீறல்: 15 உணவகங்களை மூட உத்தரவு
பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக 15 உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற 18 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோக, உணவு, பானக் கடைகளாக செயல்பட அனுமதிக்கப்பட்ட இரு இரவுநேர கேளிக்கைக்கூடங்களின் உணவு உரிமங்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டன.பாதுகாப்பு நடைமுறைகளை அத்துமீறியதற்காக 36 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தடுப்பூசி முறையில் வேறுபடுத்தும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்கின்றனரா என்பதைச் சரிபார்க்க, 670க்கும் அதிகமான இடங்களில் அமலாக்க அமைப்புகள் கண்காணித்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அத்தகைய ஒரு பரிசோதனையின்போது, ரோச்சோரில் உள்ள 'ஓம்ஸ் கார்டன்' எனும் உணவகத்தில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அமர்ந்து உணவருந்தியது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 8 வரை அந்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக மற்ற 14 உணவகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
'டிக்டாக்' வாயிலாக மனநலம் குறித்து உதவி நாடும் இளையர்கள்
ஒளிபதிவுகளைப் பகிர்ந்துகொள்ளும் தளமான 'டிக்டாக்', சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 'யூத் ஃபார் குட்' என்ற திட்டத்தைத் தொடங்கியது.
அதன் வழி இதுவரை 160க்கும் மேற்பட்ட இளையர்கள் மனநல சுகாதார அமைப்புகளை நாடியுள்ளனர்.
மனநலத்தைக் குறித்து எங்கெங்கு உதவி பெறலாம் என்றும் தங்களது வேண்டுகோள்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படுமா என்றும், தங்களுக்கு உதவ யாருமில்லாத சூழலில் என்ன செய்யலாம் என்றும் இளையர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர் என்று 'டிக்ட்டாக்'கின் தென்கிழக்காசியப் பொதுத் திட்டத் தலைவர் தெரிசா டான் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல் மே மாதத்தில் பல அமைப்புகள் இத்திட்டத்தில் சேர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் எட்டு வார காலத்துக்கு 50 தன்னார்வலர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியின் முடிவைக் குறிக்கும் நிகழ்ச்சிக்கு மெய்நிகர் மூலம் வருகை தந்திருந்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு ஷுவெலிங் இளையர்களுடைய மனநல சுகாதாரத்தைக் குறித்து தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாகவும் இளையர்களுக்கு உதவ வழிகளைத் தேட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பொருள் சேவை வரியை செலுத்தாமல் ஏமாற்றியதற்கு $64,000 அபராதம்
விளையாட்டுச் சாதன இறக்குமதியாளரான, 'சிங்கப்பூர் டிரை குளோபல்' நிறுவனத்தின் இயக்குநரான மார்க்கோ டிட்ரிக் $13,400க்கு மேற்பட்ட பொருள் சேவை வரி கட்டாமல் ஏமாற்றினார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவருக்கு $64,000 அபராதம் வித்திக்கப்பட்டது. தண்டனையின்போது இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

