கொரோனா கிருமிப் பரவல் சூழலால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க 35,800க்கும் மேற்பட்ட வர்த்தக இடங்களின் வாடகைதாரர்களும் உரிமையாளர்களும் இரண்டாம் கட்ட வாடகை நிவாரண நிதியை (ஆர்எஸ்எஸ்) இம்மாதம் 22ஆம் தேதி முதல் பெறுவர்.
திட்டமிட்ட காலகட்டத்திற்கு ஒரு மாதம் முன்னதாகவே $200 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி வழங்கப்படுவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நிதி அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. நிறுவனங்களுக்கு விரைவில் நிதி உதவி கிடைப்பதை இது உறுதிப்படுத்தும் என அது கூறியது.
முதல் கட்ட நிவாரண நிதியைப் போலவே இம்முறையும் கடைக்காரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
இது கடைக்காரர்களை நிதி விரைவில் சென்றடைவதை உறுதிப்படுத்துகிறது என்றும் அது தெரிவித்தது.
இந்த வாடகை நிவாரணம் சிறிய, நடுத்தர வர்த்தகங்களுக்கும் தகுதி பெறும் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கும் வழங்கப்படும். வாடகை நிவாரண நிதி பற்றிய தகவல்களை தகுதி பெறுவோர் அஞ்சல் முலம் பெறுவர். 'மைடெக்ஸ்' இணைய வாசல் வழி செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து அக்கடிதத்தின் மின் நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.
'பேநவ்' அல்லது 'ஜைரோ' ஏற்பாடுகள் இல்லாதவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதிக்குள் காசோலைகள் சென்றடையும்.
வாடகை நிவாரணத்துக்குத் தகுதி பெற்றும், நிதி குறித்த அறிவிப்பைப் பெறாதோர் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து அனுப்பலாம். விண்ணப்பங்கள் ஆணையத்தைச் சென்றடைய வேண்டிய இறுதிநாள் நவம்பர் 12ஆம் தேதி.

