மற்றவர்களைப் பணிவன்புடன் குப்பையை எடுக்கச் சொல்வது, பிள்ளைகள் தூய்மையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வைப்பது, இவற்றின் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் பொதுச் சுகாதார மன்றம் நேரலையாக நேற்று ஏற்பாடு செய்திருந்த தூய்மை தொடர்பான கலந்துரையாடலில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் மேற்கண்டவாறு கூறினார்.
"பொதுச் சுகாதாரம், தூய்மை பற்றிய விழிப்புணர்வும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும்போது தரமான துப்புரவுப் பணி சேவைக்கான தேவையும் அதிகரிக்கும்.
"இதைச் சமாளிக்க துப்புரவு, கழிவு நிர்வாகம், பூச்சிக்கொல்லி சேவை வழங்குநர்கள் ஆகியோர் புதுப்புது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
"இது தொடர்பான ஊழியரணி மூப்படைந்து, குறைந்து வரும் நிலையில், உற்பத்தித்திறனைப் பெருக்கி இதுபோன்ற வேலைகளை மக்கள் விரும்பி ஏற்கும் வகையில் அவற்றை மாற்றியமைக்க வேண்டும்," என அமைச்சர் விளக்கினார்.
சிங்கப்பூரை தூய்மையாக வைத்திருப்போம் என்ற ஆண்டுதோறும் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக பொதுச் சுகாதார மன்றத்தின் நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஆறுமாத இயக்கத்தில் பல நடவடிக்கைகளும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்றைய கலந்துரையாடலில் துப்புரவுத் தொழிலைச் சேர்ந்தவர்களும் சுற்றுப்புறத்தைப் பேணும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இவர்கள் தூய்மை சிந்தனையை பொதுமக்களிடம், குறிப்பாக பொதுமக்கள் கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், அக்கம்பக்கப் பகுதிகள், உணவு அங்காடி நிலையங்கள்,காப்பிக் கடைகள் போன்ற இடங்களில் எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து கருத்து பரிமாறிக்கொண்டனர்.
இதில், விதிமுறைகள் மூலம் பொதுச் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்தனர்.
இதுபற்றிக் கூறிய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சமூகவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் டான் எர்ன் செர், "இதில் முடிவாக என்ன வேவை என்னவென்றால் எவரும் கவனிக்காத போதும் குப்பை எறியாமல் இருப்பவர்களை உருவாக்குவதுதான்," என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட உரை ஒன்றில், கொவிட்-19 கொள்ளைநோய் பொதுச் சுகாதாரத்திலும் சுத்தத்திலும் உயர் தரநிலைகள் இருக்கவும் அதற்கான விழிப்புணர்வு குறித்தும் நமக்கு உணர்த்தியுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

