காற்பந்து தொடர்பான சட்ட விரோத சூதாட்டத்திற்கு எதிரக 'இன்டர்பொல்' எனப்படும் அனைத்துலக போலிஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் சிங்கப்பூர்க் காவல் துறையும் பங்காற்றியது.
'யூஏஃபா' ஐரோப்பிய காற்பந்தாட்ட போட்டிகளின்போது நடத்தப்பட்ட இந்நடவடிக்கையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த ஏறத்தாழ 1,400 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், $10.7 மில்லியன் சிக்கியது.
இதில் சம்பந்தப்பட்டோர் கிட்டதட்ட $465 மில்லியன் (அமெரிக்க டாலர்) அளவிலான பணத்தைக் கையாண்டுள்ளனர் என சிங்கப்பூர்க் காவல் துறை நேற்று வெளிவிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் காற்பந்து சூதாட்டத்தின் தொடர்பில் காவல் துறை ஜூன் 11லிருந்து ஜூலை 31 வரை சிங்கப்பூரில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 72 பேர் கைது செய்யப்பட்டதுடன், $800,000 மேற்பட்ட ரொக்கப் பணம், கணினிகள், கைபேசிகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி வருவதாகக் காவல் துறை கூறியுள்ளது.
சட்ட விரோதமாக வெளிநாட்டு சூதாட்டத்தில் (ரிமோட் கேம்பலிங்) கலந்துகொள்வோருக்கு $5,000 அபராதம், ஆறுமாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்ட விரோதமான சூதாட்டத்திற்குத் துணை புரிந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் $20,000லிருந்து $200,000 வரை அபராதம், ஐந்தாண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

