பொது மக்கள் செப்டம்பர் 13, திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட வழக்க நிலை ஆங்கில கேட்டல் கருத்தறிதல் தேர்வின் ஒலிப்பகுதியின் தரத்தைப் பற்றி மனவருத்தம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம், தேர்வு மீண்டும் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளது.
ஒலிப்பகுதி தெளிவாகயில்லாத்தையும் உரையாடல் பகுதிகளில் வெளிநாட்டுப் பாணியில் ஆங்கிலம் பேசப்பட்டதையும் காரணமாகக் கூறி, 1,400க்கும் மேற்பட்டோர் இணையம் வழி மனு ஒன்றில் கையொப்பமிட்டு, அத்தேர்வை மீண்டும் நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதைக் குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத்தை அணுகியபோது நிலவிவரும் கருத்துகளை அது அறிந்துள்ளதாகக் கழகம் நேற்று கூறியது.
மழை, சாலைப்பணிகள், சுழலும் மின்விசிறிகள் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான காரணங்களால் ஒலிப்பகுதி தெளிவின்றி இருந்திருக்கலாம் என்று கழகம் குறிப்பிட்டது.
மேலும், ஒலிப்பகுதியில் இடம்பெற்றோர் பேசிய பாணி அனைத்துலகத் தரத்துக்கு ஏதுவான ஆங்கிலத்தில் பேசிய சிங்கப்பூரர்கள் என்றும் அவர்கள் முன்னாள் தேசிய தேர்வுகளில் இடம்பெற்றவர்கள் என்றும் கூறியது. மேலும், உரையாடல்கள் நம்பகத் தன்மைவாய்ந்தவையாக இருக்க, பலதரபட்ட தொனியும், வேகமும், ஒலியளவும் பயன்படுத்தப்படும் என்றும் கழகம் விளக்கியது.
அதுமட்டுமின்றி, ஏற்புடைய தொழில்நுட்பத் தரத்தில் ஒலிப்பகுதி பதிவு செய்யப்பட்டதாகவும் தேசிய கல்வி கழகம் உட்பட, அனுபவம் பெற்ற நிபுணர்கள் பலரால் பல முறை பகுதி சரிபார்க்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் கூறியது. மாணவர்களுக்கு நியாயமான முறையில் மதிப்பீடு வழங்கப்படும் என்று கழகம் உறுதியளித்தது.

