இந்த ஆண்டுக்கான கேலாங் சிராய் மரபுடைமை பாதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கேலாங் சிராயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், வழிபாட்டு இடங்கள், அடையாளச் சின்னங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இது கைகொடுக்கும்.
புத்தகத்தின் உதவியுடன் பொதுமக்கள் கேலாங் சிராய் வட்டாரத்தைச் சுற்றிப் பார்க்கலாம். 45 நிமிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளை வழிகாட்டி ஒருவர் சுற்றிக் காண்பிப்பார். சுற்றுலாவுக்குக் கட்டணம் கிடையாது.
மூன்று சுற்றுலாப் பாதைகளிலிருந்து ஒன்றைப் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பாதையிலும் 10லிருந்து 12 இடங்கள் இடம்பெறும். முன்னாள் கேலாங் தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை சுற்றிக் காண்பிக்கப்படும் இடங்களில் அடங்கும். 'ரோச்சோர் பீன்கர்ட் ஹவுஸ்' உணவுக் கடை, 'கெங் வா' காப்பிக் கடை போன்றவை உணவுப் பிரியர்களை ஈர்க்கும்.
யூனோஸ் கிரெசன்ட் சந்தை மற்றும் உணவங்காடி, சிலோன் ரோட்டில் அமைந்துள்ள யூரேசிய சங்கத்தின் தலைமையகத்தில் உள்ள மரபுடைமை காட்சியகம் உள்ளிட்டவை மரபுடைமை பாதையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
கேலாங் சிராய் மரபுடைமை பாதை 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. லொரோங் 22 கேலாங்கிலிருந்து யூனோஸ் கிரெசன்ட்டின் கிழக்குப் பகுதி வரை பாதை நீடிக்கும்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக இவ்வாண்டு மெய்நிகர் வாயிலாகவும் பாதைகள் சுற்றிக் காண்பிக்கப்படும்.
facebook.com/gsheritagetrail ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக கேலாங் சிராயைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்துகொள்ளலாம். வழிகாட்டியுடன் நடத்தப்படும் சுற்றுலாக்களை மேற்கொள்வோருக்கு கேலாங் சிராய் மரபுடைமை பாதை புத்தகம் வழங்கப்படும். கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால் அதிகபட்சமாக ஐவர் மட்டுமே ஒரு சுற்றுலாவில் இடம்பெறமுடியும்.

