குவீன்ஸ்வேயில் 'ரைடவுட் டீ கார்டன்' எனும் தோட்டப் பகுதியில் 32 ஆண்டுகளாக இருக்கும் 'மெக்டோனல்ட்ஸ்' உணவகத்தின் கிளை தொடர்ந்து இயங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்தக் கிளை மூடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
கிளையை நடத்துவதற்கான ஏலக் குத்தகை 'ஹான்பாவ்பாவ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் 'மெக்டோனல்ட்ஸ்' உணவகங்களை அந்நிறுவனம்தான் நடத்துகிறது.
'ரைடவுட் டீ கார்டன்' பகுதியின் பரப்பளவு 57,453.9 சதுர அடி. அதற்கான ஏலக் குத்தகைக்காக 'ஹான்பாவ்பாவ்' உட்பட 14 உணவு, பானத் துறை நிறுவனங்கள் விண்ணப்பித்தன. குத்தகையை வெல்லும் நிறுவனத்திற்கு முதலில் மூவாண்டு காலத்திற்கு அந்தப் பகுதி வாடகைக்கு விடப்படும். அதற்குப் பிறகு அதிகபட்சமாக ஆறாண்டுகள் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.
வாடகையாக நிறுவனங்கள் வழங்கத் தயாராய் இருக்கும் தொகை, அந்த இடத்திற்காக அவை வைத்திருக்கும் திட்டத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏலக்குத்தகையை யாரிடம் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முன்னதாக சிங்கப்பூர் நில ஆணையம் கூறியிருந்தது.
1989ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட 'ரைடவுட் டீ கார்டன்' பகுதியில் இருக்கும் 'மெக்டோனல்ட்ஸ்' கிளை சிங்கப்பூரின் ஆகப் பழைய 'மெக்டோனல்ட்ஸ்' உணவகங்களில் ஒன்று. அங்கு உணவகத்தின் அருகே பலர் அதிகமாக விரும்பும் குளம் ஒன்று அமைந்துள்ளது. குளம் உள்ள பகுதியிலும் 'மெக்டோனல்ட்ஸ்' உணவகம் அமைந்திருக்குமா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.
பல காலமாக தங்களிடம் வருவோர், புதிய வாடிக்கையாளர்கள் ஆகியோரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைவதாக 'மெக்டோனல்ட்ஸ்' நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

